ETV Bharat / international

Meteorite: மொட்டை மாடியில் காஃபி குடித்த பெண்... விடாமல் விரட்டிய விண்கல்!

author img

By

Published : Jul 17, 2023, 3:55 PM IST

மொட்டைமாடியில் காஃபி குடித்துக்கொண்டிருந்த பெண் மீது விண்கல் விழுந்து தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது தோழியுடன் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து காஃபி குடித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது மிகுந்த சத்தத்துடன் மேலே இருந்து ஏதோ ஒன்று தன் மீது விழுந்ததாகவும், இதனால் தனது முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், பெண் ஒருவர் அவரது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து தனது தோழியுடன் காஃபி குடித்ததாகவும், அப்போது பூம் என்ற சத்தத்தோடு ஏதோ ஒரு மர்மப் பொருள் அவர் மீது விழுந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அந்தப் பெண் தன் மீது விழுந்த அந்தப் பொருள் என்ன? எனத் தெரியாமல் குழம்பியுள்ளார். சிமென்ட் ஓடுபோல் தோன்றியதால் தனது வீட்டின் அருகே உள்ள கட்டுமானத் தொழில் செய்யும் நபரை வரவழைத்த அந்தப் பெண் அவரிடம் தன் மீது விழுந்த பொருளை காட்டி விசாரித்துள்ளார்.

அதைப் பார்த்த அந்த நபர் இது சிமென்ட் ஓடு போன்றோ அல்லது கல் போன்றோ இல்லை எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆய்வாளரான தியரி ரெப்மேன் என்பரிடம் அந்த பொருளை ஆய்வு செய்யக்கோரியுள்ளார், அந்த பெண். இவர் ஒரு புவியியலாளர் என்பதால் அந்தப் பொருள் புவியில் இருக்கும் பாறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதாகவும், இது ஒரு விண் கல்லாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தியரி ரெப்மேன் அந்த பெண்ணின் மீது விழந்த அந்த பாறை போன்ற பொருளில் இரும்பு மற்றும் சிலிக்கான் கலவை அதிகம் இருப்பதாகவும், 100 கிராம் எடை உள்ளதாகவும்; இதனால் அது ஒரு விண் கல்லாக இருக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்ற விண்வெளியில் இருந்து வரும் பொருட்களால் மக்கள் தாக்கப்படுவது என்பது மிகவும் அரிதான சம்பவம் எனக்கூறிய தியரி ரெப்மேன், இவை புவியில் வளிமண்டலத்தில் பயணித்து தரையைத் தாக்கும் விண் கற்கள் என அழைக்கப்படுவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆய்வாளர் ரெப்மேன், விண்வெளியில் இருக்கும்போது, ஒரு விண்கல்லின் அளவு ஒரு தூசி தானியத்திலிருந்து, சிறுகோள் வரை தான் அளவு இருக்கும் எனவும் நாசாவின் அறிக்கையின்படி, பூமியில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட சுமார் 50 டன் விண்கற்கள் தரையில் விழுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

மேலும், பிரான்ஸ் நாட்டின் மிதமான காலநிலையில் விண்கற்கள் தரையில் விழுவது மிகவும் அரிதான நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இதேபோன்று கடந்த 1954ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது விண்கல் விழுந்தது குறிப்பிடத்தக்கது எனவும்; அதன் எடை சுமார் 3.6 கிலோ இருந்தது எனவும் ஆய்வாளர் ரெப்மேன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Threads: த்ரெட்ஸ் செயலியின் தினசரி பயன்பாடு 50% வரை குறைவு - ஷாக்கிங் டேட்டா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.