ETV Bharat / international

ரஷ்யாவின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது!

author img

By

Published : Sep 5, 2020, 11:58 AM IST

Russian vaccine safe
Russian vaccine safe

மாஸ்கோ : ரஷ்யா உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தான ’ஸ்புட்னிக் V’இன் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் ’தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஸ்புட்னிக் V பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றின் உலகெங்கும் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. இந்தியா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை.

கரோனா தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் கரோனாவுக்கு தாங்கள் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா கடந்த மாதம் அறிவித்தது. ஜூன் மாதம் வரை தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சிகளை தொடங்காத ரஷ்யா, இரண்டு மாதங்களில் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ரஷ்யாவின் முதல் விண்கலத்தை நினைவுபடுத்தும் வகையில் ’ஸ்புட்னிக் V’ என்றும் இந்தத் தடுப்புமருந்திற்கு பெயரிடப்பட்டது. இருப்பினும், இந்தத் தடுப்புமருந்தின் பாதுகாப்புத்தன்மை குறித்து உலக நாடுகளின் பல ஆராய்ச்சியாளர்களும் கேள்வி எழுப்பினர். மேலும், முதல் இரண்டுகட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளை ரஷ்யா வெளியிட வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தின.

இந்நிலையல், ஸ்புட்னிக் V தடுப்புமருந்தின் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள், ’தி லான்செட்’ இதழில் (The Lancet journal) வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்யாவிலுள்ள இரண்டு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைகளில் 76 பேர் பங்கேற்றுள்ளனர்.

தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களின் உடலில் 21 நாள்களுக்குள் கரோனாவுக்கு எதிரான ஆன்ட்டிபாடிகள் உருவாகத் தொடங்கியுள்ளது. மேலும், 42 நாள்கள் வரை அவர்களின் உடலில் எவ்வித எதிர்மறையான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் உடலில் உருவாகிய ஆன்ட்டிபாடிகளையும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர். கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் உருவான ஆன்ட்டிபாடிகளுக்கு இணையான ஆன்ட்டிபாடிகள், இந்தத் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்களின் உடலிலும் உருவாகியுள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

உலகெங்கும் தற்போதுவரை கரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு கோடியே 67 லட்சத்து 95 ஆயிரத்து 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எட்டு லட்சத்து 78 ஆயிரத்து 963 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ”கரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் உலக சுகாதார அமைப்புடன் இணைய மாட்டோம்" - அமெரிக்கா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.