ETV Bharat / entertainment

முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு? - தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்

author img

By

Published : Jun 20, 2023, 1:41 PM IST

சிம்பு, விஷால் உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு - தயாரிப்பாளர் சங்கம் திட்டம்?
சிம்பு, விஷால் உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு - தயாரிப்பாளர் சங்கம் திட்டம்?

தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்னை செய்து வரும் நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டும் கால்ஷீட் வழங்காத நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் பட்டியல் எடுத்து நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா மற்றும் யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவெடுத்து இருக்கின்றனர். இதில் சில நடிகர்களுக்கு நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டு சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், நடிகர் சங்கம் கொடுக்கும் பதிலை வைத்து அடுத்த கட்ட முடிவை எடுக்க அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகர் சிம்பு மீது ரெட் கார்டு புகார்கள் வந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அந்த பிரச்னை சூடு பிடித்துள்ளது.

அதேபோல், மறைந்த தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலுவிடம் முன் தொகை பெற்று அவரின் படத்தில் நடிக்காத காரணத்திற்காக விஷால், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு கால்ஷீட் வழங்காததற்காக எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் மதியழகன் புகாரின் அடிப்படையில் அதர்வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், யோகி பாபு மீது பல தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து முறையான பதில் கொடுத்தால் அவர்களுடைய படங்களுக்கு ஒத்துழைப்பு தருவது என்றும், திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ரெட் கார்ட் விதிப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

மேலும், இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி கூறுகையில், "நடந்து முடிந்த பொதுக்குழுவின் நடிகர்கள் குறித்த தீர்மானம் மட்டுமல்ல, நிறைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2021 -2022ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் வரவு - செலவுக் கணக்கிற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

2015 முதல் 2022 வரையில் வெளியான சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு மானியத்தொகை வழங்கிடவும், 2016 முதல் 2022 வரை வெளியான திரைப்படங்களின் நடிகர், நடிகை தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கிடவும் குழு அமைத்ததற்கு நன்றி தெரிவித்தோம்.

தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு படப்பிடிப்பு, மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்னை செய்து வரும் ஐந்து நடிகர்களை வைத்து படம் தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்ட பிறகு ஒப்பந்தம் செய்ய வேண்டும். அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது உண்மை.

ஆனால், சமூக வலைதளங்களில் சொல்லப்படும் நடிகர்களின் பெயர்கள் இல்லை. சிம்பு, விஷால் குறித்து கொஞ்ச நாட்களாகவே இணைய தளங்களில் அப்படிச் செய்தி வெளியாகிக் கொண்டிருப்பதால், அவர்களையும் இணைத்திருக்கிறார்கள். நடிகர்களின் பெயர்களைச் சொல்லிவிடுவோம்.

ஆனால், எல்லா நடிகர்களுமே படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். பெயர் சொல்லிவிட்டால் அந்தத் தயாரிப்பாளர்களின் படங்களுக்கு பாதிப்பு ஆகும் என்றுதான் சொல்லாமல் விட்டோம். ஆனாலும் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காத நடிகர்கள் பிரச்னை நிறையவே இருக்கிறது. இது குறித்து நடிகர் சங்கத்தில் பேசி சமரசம் ஏற்பட்டால் நல்லது. இல்லை என்றால் பெயரை வெளியிட வேண்டியதுதான்.

அதேபோல திரைப்படம் வெளியான அன்றைய தினமே திரைப்படங்களின் விமர்சனங்களை மோசமாக ஒளிபரப்பு செய்யும் நபர்கள் மீது கண்டிப்பாக தொழில் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம்" என்றார்.

மேலும், அதனைத் திரையரங்கு உரிமையாளர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்று கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.