ETV Bharat / crime

காவலர்கள் எனக்கூறி காண்டிராக்டர் கடத்தல் - காரணம் குறித்து அலசும் காவல் துறை

author img

By

Published : Aug 26, 2021, 9:00 AM IST

Kidnap
Kidnap

கோயம்பேட்டில் காவல் துறையினர் எனக்கூறி நிச்சயதார்த்த நாளில் கட்டட காண்டிராக்டரை ஒரு கும்பல் கடத்தியது. தகாத உறவில் இருந்ததால் கணவர் ஆட்களை ஏவி கடத்தினாரா அல்லது காதலி நிச்சயத்தை நிறுத்த கடத்தினாரா எனக் காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

சென்னை: செக்காடு காமராஜர் தெருவைச் சேர்ந்த சுதாகர் (29) பட்டாபிராமில் சொந்தமாகக் கட்டுமான தொழில் செய்துவருகிறார். இதற்கு முன்பு கே.கே. நகரில் உள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டில் உதவிப் பொறியாளர் தனலட்சுமியிடம் தற்காலிகமாகப் பணி செய்துவந்தார். சுதாகருக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி திருமண நிச்சயம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 12ஆம் தேதி சுதாகரைத் தொடர்புகொண்ட பெண் ஒருவர், "வீடு கட்ட வேண்டும். அது குறித்து பேசுவதற்காக கோயம்பேடு அருகே உள்ள தனியார் விடுதிக்கு வாருங்கள்" என்று அழைத்துள்ளார்.

ஆள்மாறாட்டம் செய்து கடத்தல்

இதனை நம்பிவந்த சுதாகரை, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் தாங்கள் மதுரை காவல் துறையினர் எனக் கூறி, "உன் மீதுள்ள வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" எனக் கூறி கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து அன்னை இல்லம் அருகே வைத்து அடித்து செல்போன், ஏடிஎம் அட்டையைப் பறித்துள்ளனர்.

பின்னர் மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும் எனக்கூறி திருச்சி நெடுஞ்சாலை வழியாக காரில் அழைத்து வரும்போது, சுமார் ஆறு நபர்கள், 'நாங்கள் காவல் துறையின் உயர் அலுவலர்கள்' என அறிமுகப்படுத்திக்கொண்டு உதவிப் பொறியாளர் தனலட்சுமி குறித்து விசாரணை செய்துள்ளனர்.

இதனையடுத்து கேரளாவிற்கு காரில் அழைத்துச் சென்று விடுதியில் அடைத்துவைத்து தனலட்சுமிக்கு எதிராக ஆவணங்களைச் சேகரித்து கொடுக்கும்படியும், இல்லையென்றால் உன்னையும், குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

காணொலி எடுத்து மிரட்டல்

இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலுக்கு அழைத்துச் சென்று சுதாகரை நிர்வாணமாகக் காணொலி எடுத்து தனலட்சுமி குறித்தான ஆவணங்களைத் தரவில்லையென்றால், திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு இந்தக் காணொலியை அனுப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

பின்னர், தனலட்சுமிக்கு சுதாகர் போன் செய்தபோது, 'உனது குடும்பத்தினர் உன்னைக் காணவில்லை என்று தேடி கொண்டிருக்கின்றனர். அண்ணா நகர் காவல் நிலையத்திலும் தகவல் அளித்துள்ளனர்' என்று கூறியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்தக் கும்பல், ஆகஸ்ட் 16ஆம் தேதி திருச்சி புறவழிச் சாலையில் சுதாகரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளது. இதனையடுத்து சுதாகர் அண்ணா காவல் நிலையத்திற்கு வந்தபோது சம்பவம் நடந்த இடம் சி.எம்.பி.டி. காவல் நிலைய எல்லை என்பதால், அங்கு சென்று புகார் அளிக்கும்படி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சுதாகர் உடல்நிலை சரியில்லாமல் போனதால், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 24) சம்பவம் குறித்து சி.எம்.பி.டி. காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு

விசாரணையில் உதவிப் பொறியாளர் தனலட்சுமி முதல் கணவரைப் பிரிந்து இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துகொண்டதும், இரண்டாவது கணவரைப் பிரிந்து சுதாகருடன் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவில் இருந்துவந்ததும் தெரியவந்தது.

இதனால் இரண்டாவது கணவர் கோபமடைந்து சுதாகரை கடத்தி உள்ளாரா அல்லது நிச்சயதார்த்தத்தை நிறுத்த காதலி அடியாட்களை வைத்து கடத்தினாரா அல்லது சுதாகர் நாடகமாடுகிறாரா எனப் பல கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.