ETV Bharat / city

கர்நாடகாவில் நிகழும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் - கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

author img

By

Published : Feb 10, 2022, 1:47 PM IST

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

கர்நாடகாவில் நிகழும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் அதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது எனக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கருமத்தம்பட்டி நகராட்சி, சாமளாபுரம் பேரூராட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “திமுக கூட்டணி மட்டுமல்லாமல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்களும் வெற்றிபெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

சாதகமான சூழல்

திமுக கூட்டணி வெற்றிபெற்று மக்களுக்கு அனைத்துத் திட்டங்களும் சென்றடையும் வகையில் தொண்டர்கள் பாடுபட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் சாதகமான நிலையில் உள்ளது.

இந்தத் தேர்தலோடு கொங்கு மண்டலம் திமுக கூட்டணியின் கோட்டை என்பதை நிரூபிக்கும். மக்களும் அந்த மனநிலையில்தான் உள்ளனர். ஐந்து ஆண்டுகளாக வார்டு உறுப்பினர்கள் இல்லாமலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட இந்தத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

வளர்ச்சித் திட்டங்கள்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் 70 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் அனைவரும் வெற்றிபெறுகின்ற சூழலில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர் தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் வேகமெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சியில் உள்ள எங்கள் பொறுப்பாளர்கள் திமுக நிர்வாகிகளுடன் பேசி தனித்து நிற்பது என முடிவு எடுத்துள்ளனர். முடிந்தவரை 90 விழுக்காட்டிற்கு மேலாக அனைத்து இடங்களிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒரு சில இடங்களில் அந்தந்தப் பகுதியில் உள்ள நிர்வாகிகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை. அந்த இடங்களில் போட்டிகள் உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற சூழ்நிலை உள்ளது. இது குறித்து அந்தந்தப் பகுதியில் உள்ளவர்கள் முடிவெடுத்துக் கொண்டு அந்த வேலைகளைச் செய்துகொண்டுள்ளனர். அதே சமயத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுகவிற்கு போட்டி வேட்பாளர்கள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் இல்லை.

சுமுகமாக கூட்டணி வேட்பாளர்கள் முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் சிறு வேறுபாடுகள் இருக்கலாம். அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. கர்நாடகாவில் நிகழும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அது போன்ற நிகழ்வுகள் நடக்க கூடிய வாய்ப்புகள் கிடையாது, அது நடக்காது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜகவினரின் வேல், கம்பு அரசியலை மக்கள் விரும்பவில்லை - திண்டுக்கல் லியோனி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.