ETV Bharat / city

9 ஐஏஎஸ் அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மாநில தகவல் ஆணையம் தலைமை செயலாளருக்கு பரிந்துரை

author img

By

Published : Apr 10, 2021, 9:54 PM IST

Updated : Apr 10, 2021, 11:05 PM IST

9 ஐஏஎஸ் அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மாநில தகவல் ஆணையம் தலைமை செயலாளருக்கு பரிந்துரை
9 ஐஏஎஸ் அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மாநில தகவல் ஆணையம் தலைமை செயலாளருக்கு பரிந்துரை

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறைகேடு நடப்பதற்கு காரணமாக இருந்த தலைவர் பொறுப்பு வகித்த, 9 ஐஏஎஸ் அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் ஐஏஎஸ் அலுவலர்களுக்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வே.கொளதமன், வி.லட்சுமிகாந்தன், பா.தாமோதரன், ஜெ.சிமியோன் ஆகியோர் ஒரு வழக்கினை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கானது மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ் முன்னிலையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த மாநில தகவல் ஆணையர்,

இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ள மனுதாரர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர், உதவி பேராசிரியர் பணிகளுக்காக பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில் பங்குப் பெற்றவர்கள். தேர்வுகளில் சரியான விடை அளித்திருந்தும், சில வினாக்களுக்கு விடைகளை தவறாக எழுதியுள்ளதாகக் கூறி அவர்களுக்கு குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் மனுதாரர்கள் விடைகள் அளித்திருந்தும், அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்படாததால் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அரசு பணிகளுக்காக போட்டி தேர்வு தேர்வினை நடத்துவதற்கு மட்டும் தேர்வு எழுதுபவர்கள் ரூ.10 கோடிக்கும் மேலாக தேர்வு கட்டணம் செலுத்துவதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, கல்வி கற்பது என்பது இந்திய மாணவர்களின் அடிப்படை உரிமை. அந்த அடிப்படை உரிமையை மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வழங்கி, அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்கிறது.

வினாத்தாள், விடைகுறிப்பு போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெற்று தேர்வுகளை ரத்து செய்வது, முழுமையான பணி நியமனம் செய்யாதது போன்ற காரணங்கள் மாணவர்களுக்கு அந்த ஆசிரியர்களால் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையான கல்வி கிடைக்காமல் போய் விட்டது. சம்பந்தப்பட்ட கல்வி ஆண்டுகளில் ஆசிரியர்கள் இல்லாமலேயே மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு சென்றுவிட்டனர்.

அரசு பணியை செய்கிறோம் என்ற பொறுப்புடைமை இல்லாமல் செயல்பட்ட காரணத்தாலும், ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டி தேர்வுகளில் தொடர்ச்சியாக தவறான வினாக்கள் கேட்பது, தவறான விடைகுறிப்பு வெளியிடுவது எந்த புத்தகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடாமல் இருப்பது, தொடர்ச்சியாக பல போட்டித் தேர்வுகளில் தவறு நடந்திருந்தும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக பணியாற்றியவர் அத்தவறு மீண்டும் நடைபெறாமல் பாத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

எந்த பிரச்னையும் இல்லாமல் முழுமையாக தேர்வுகளை நடத்தி முடித்து முழுமையான பணி நியமனத்தை முடிக்க தெரியாத அலுவலர்கள், அனுபவம் இல்லாத மற்ற அரசு பணிகளை செய்வது மற்றும் மற்ற பொது அதிகார அமைப்புகளை சிறப்பாக நிர்வாகம் செய்யாதது போன்ற காரணத்தால் ஐஏஎஸ் அதிகாரிகளான ஜர்ஜித் கே.சவுத்ரி (2011-2013), விபு நாயர் (2013-2017), காக்கர்லா உஷா (2017), டி.ஜெகநாதன் (2017), கே.சீனிவாசன் (2018), கே.நந்தகுமார் (2018), எஸ்.ஜெயந்தி (2018), என்.வெங்கடேஷ் (2018-2019), ஜி.லதா (2019-2020) ஆகியோர் ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற பொது அதிகார அமைப்பின் தலைவர்களாக பணியாற்றிய மேற்கண்ட இந்திய ஆட்சி பணி அதிகாரிகளின் (ஐஏஎஸ்) பணிப்பதிவேடுகளில் பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மையோடு செய்ய வேண்டிய பணிகளை சரியாக செய்யவில்லை என்று பதிவு செய்து, அவர்களின் பணி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கையாக கட்டாய ஓய்வில் அனுப்புவதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005ன்படி தமிழ்நாடு தலைமை செயலாளர் அவர்களுக்கு இந்த தகவல் ஆணையம் பரிந்துரை செய்கிறது". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் சுர்ஜித் கே.சவுத்திரி, விபுநாயர் ஆகியோர் பணிஓய்வு பெற்றுவிட்டனர். மற்ற 7 அதிகாரிகளும் தற்போது பணியில் உள்ளனர். மாநிலத் தகவல் ஆணையத்தின் பரிந்துரை மூலம் அவர்களுக்குச் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டுகள் கடந்த 2011 முதல் 2020 வரை 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீட் தேர்வை ஏற்க முடியாது: தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

Last Updated :Apr 10, 2021, 11:05 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.