ETV Bharat / city

மருத்துவக் கலந்தாய்வு: போலி சான்றிதழ் கொடுத்த மாணவி, தந்தை உள்பட மூவருக்கு வலை!

author img

By

Published : Dec 14, 2020, 10:44 AM IST

neet
neet

சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவி, அவரது தந்தை பல் மருத்துவர், போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த கணினி மையம் உரிமையாளர் ஆகியோரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீக்ஷா என்னும் மாணவி, 610 மதிப்பெண்கள் பெற்ற ஹிரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் மருத்துவக் கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த மாணவி தீக்ஷா, அவரது தந்தை பல் மருத்துவர் பாலச்சந்திரன் ஆகியோர் மீது ஆறு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நாளை காவல் நிலையத்தில் முன்னிலையாகி விசாரணைக்கு உட்பட வேண்டுமென இருவருக்கும் காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

காவல் துறையினரின் அழைப்பாணை அடிப்படையில் மாணவி தீக்ஷா, அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோர் தரப்பிலிருந்து விசாரணைக்கு காவல் நிலையத்தில் முன்னிலையாவது குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

அவர்கள் சமர்ப்பித்த போலி நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை காவல் துறையினர், தடவியல் துறை வல்லுநர்களிடம் அனுப்பி சோதனை மேற்கொள்ள உள்ளனர். தலைமறைவாக உள்ள மாணவி தீக்ஷா, பாலச்சந்திரன், போலியாகச் சான்றிதழை அச்சடித்து கொடுத்த கணினி மைய உரிமையாளரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 71 மாணவர்களுக்கு கரோனா: சென்னை ஐஐடி மூடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.