ETV Bharat / city

சுதந்திர தின கொடியேற்றுவதில் தீண்டாமை இருக்கவேகூடாது என எச்சரித்த தலைமைச்செயலாளர்

author img

By

Published : Aug 12, 2022, 8:45 PM IST

Updated : Aug 12, 2022, 8:53 PM IST

district
district

சாதியப் பாகுபாடுகள் இன்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்

சென்னை தலைமைச்செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "சுதந்திர தினத்தில் சென்னை தலைமைச்செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபாகும்.

ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்னைகளோ, தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறக்கூடும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 17இன் படி தீண்டாமையில் ஈடுபடுவது தண்டைக்குரிய குற்றம். எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச்சட்டப்படி, பட்டியலின மற்றும் பழங்குடியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்கள் என எவரையும் பணி செய்யவிடாமல் தடுப்பதோ, அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றம்.

இவற்றைக்கருத்தில் கொண்டு எதிர்வரும் 75ஆவது சுதந்திர தின விழாவில், எவ்வித சாதியப் பாகுபாடின்றியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக்கொண்டு, அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்திலும், எவ்வித சாதியப்பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பின், காவல் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். இந்தப் புகார்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண் அல்லது ஒரு அலுவலரோ அறிவிக்கப்படலாம்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை வரும் 14ஆம் தேதிக்குள் வந்து சேரும்படியும், சுதந்திர தின விழா நிறைவுற்றதும், அது குறித்த அறிக்கையை வரும் 17ஆம் தேதிக்குள் வந்து சேரும்படியும் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தனியார் நிறுவன பாலின் விலை உயர்வு

Last Updated :Aug 12, 2022, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.