ETV Bharat / city

தன்பாலின சேர்க்கைக்கு மறுத்த நண்பனை கொன்ற வழக்கு: இளைஞரை விடுதலை செய்து தீர்ப்பு

author img

By

Published : Jun 29, 2022, 7:50 PM IST

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த நண்பனை கொன்ற வழக்கு: வாலிபரை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த நண்பனை கொன்ற வழக்கு: வாலிபரை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தன்பாலின சேர்க்கைக்கு மறுத்த நண்பனை குத்திக் கொன்றதாக இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமரன் என்ற இளைஞர், தனது நண்பர் தினேஷை சந்திக்கச் செல்வதாகக் கூறி கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி வீட்டை விட்டுச்சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாததால், சதீஷ்குமரனின் தந்தை சத்தியமூர்த்தி, நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுசம்பந்தமாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், 2016 ஏப்ரல் 12ஆம் தேதி தேவனாம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முன் சரணடைந்த தினேஷ், தன்பாலின சேர்க்கைக்கு அழைத்தபோது அதை மறுத்த சதீஷ்குமரன், இந்த விஷயத்தை வெளியில் சொல்லி விடக்கூடாது எனும் காரணத்தால், அவரை கத்தியால் குத்திக்கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் தினேஷுக்கு எதிராக பதியப்பட்ட கொலை வழக்கை விசாரித்த கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், தினேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2018 அக்டோபர் 30இல் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து தினேஷ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு,

ஒப்புதல் வாக்கு மூலத்தையும், ஆயுதம் கைப்பற்றியதையும் நம்ப மறுப்பதாக தெரிவித்த அமர்வு நீதிமன்றம், சதீஷ்குமரனின் உடல் தினேஷின் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டதை மட்டும் வைத்து தண்டனை வழங்கியுள்ளதாகவும், சதீஷ்குமரனின் காதல் விவகாரம் குறித்து விசாரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

பள்ளிக்காலத்தில் இருந்து சதீஷ்குமரனும், தினேஷும் நண்பர்களாக இருந்ததுடன், இருவரும் சில காலம் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர். மேலும், காவல் துறை தரப்பு வாதத்தின்படி தினேஷுக்கு தன்பாலினசேர்க்கை பழக்கம் இருந்திருந்தால் இருவரின் நட்பு நீடித்திருக்காது.

காவல் துறை விசாரணையில் பல குறைபாடுகள் உள்ளன எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தினேஷுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவர் வேறு வழக்கில் தேவையில்லை என்றால் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவர்களின் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் தொடக்கம் - 4 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.