ETV Bharat / state

அரசு மருத்துவர்களின் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் தொடக்கம் - 4 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்!

author img

By

Published : Jun 29, 2022, 6:55 PM IST

அரசு மருத்துவர்கள் தங்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரில் உள்ள மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில் சாகும் வரை உண்ணாவிரப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் தொடக்கம்
அரசு மருத்துவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் தொடக்கம்

சென்னை: அரசு மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ஆம் ஆண்டில் தொடர் வேலை நிறுத்தப்போராட்டங்களை நடத்தினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததுடன், திமுக ஆட்சி அமைந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால் ஆட்சி அமைந்த ஓராண்டு கடந்துள்ள நிலையிலும் மருத்துவர்களின் ஊதியப்பிரச்னை தீர்க்கப்படவில்லை.

இந்நிலையில், சேலம் மேட்டூரில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில், “சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை எஸ். பெருமாள் பிள்ளை , நளினி, அனுராதா லட்சுமி நரசிம்மன், திவ்யா விவேகானந்தன் ஆகியோர் தொடங்கியுள்ளனர். இதில் 60-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் உடன் அமர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்” என்றார்.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் எஸ். பெருமாள் பிள்ளை கூறியதாவது, “அரசு மருத்துவர்களுக்கு டாக்டர் கலைஞர் கொடுத்த அரசாணை 354ன்படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் தரப்பட வேண்டும். மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு படிப்புக்கேற்ற அரசு வேலை தரப்பட வேண்டும். அரசாணை 4D2ஆல் பாதிக்கப்பட்ட பல் மருத்துவர்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் செயல்படுத்தப்படும் சரபங்கா உபரி நீர் திட்டத்தால், மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் நினைவிட வளாகத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற, தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல, இன்று சேலம் மேட்டூரில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில், 'சாகும் வரை உண்ணாவிரதம்' தொடங்கி உள்ளோம்.

தமிழ்நாட்டில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபோது, கரோனா தொற்று பரவல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் உறுதியான நடவடிக்கை மூலம், உச்சத்தில் இருந்த கரோனா தொற்று எண்ணிக்கையை, குறைத்தோம். கரோனா மூன்று அலைகளிலும் 18ஆயிரம் அரசு மருத்துவர்களும் தமிழ்நாட்டின் பலமாக களத்தில் உறுதியாக நின்று, ஓய்வின்றி , தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், ஒவ்வொரு மருத்துவரும் அர்ப்பணிப்போடு பணி செய்தோம்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. முந்தைய ஆட்சியில் நியாயமான ஊதியக் கோரிக்கைக்காக போராடிய 118 மருத்துவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டோம். நாட்டிலேயே தமிழ்நாட்டிலேயே தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் சுகாதாரத்துறை செயல்பாடுகளில் 25 ஆவது இடத்திலுள்ள பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. ஆனால், முன்னணி மாநிலமான தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் மறுக்கப்படுகிறது.

அதுவும் மற்ற மாநிலங்களில் MBBS மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியமாக தரப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மருத்துவரும் கடந்த 13 ஆண்டுகளாக மாதம்தோறும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் வருமான இழப்புடன், கனத்த இதயத்துடன் பணி செய்து வருகிறோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதுவும் கரோனா மூன்று அலைகளிலும் ஓய்வின்றி பணியாற்றிய அரசு மருத்துவர்களின் உணர்வுகளை நம் முதலமைச்சர் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

இன்ஸ்யூரன்ஸ் மூலம் சம்பளம் தரலாம்: அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. அதுவும் இதில் பெரும்பகுதியை மருத்துவர்கள் இன்ஸ்யூரன்ஸ் மூலமாகவே அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தர முடியும் என்பதையும் அரசிடம் தெரிவித்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கையை நம் முதலமைச்சர் ஆதரித்து வந்துள்ளார்கள்.

அடுத்து அமையும் திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதியம் வழங்கப்படும் என்று 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தபோது மருத்துவர்களிடம் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கூறினார். அரசு விரைவில் கரோனாவுக்கே முற்றுப்புள்ளி வைக்க உள்ளது. அதுபோல அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையான 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை முழுமையாக நிறைவேற்றி, ஊதியப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட முதலமைச்சரை வேண்டுகிறோம். கார்ப்பஸ் பண்ட் விடயத்திலும் அரசு மறு சீரமைப்பு ஆணையை வெளியிட்டு 19.12.2017 முதல் செயல்படுத்த ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். கரோனா பேரிடர் போரில் உயிர் நீத்த அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு, அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டுகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: ஒற்றைத்தலைமை விவகாரம்: சட்ட ரீதியான மோதலுக்கு தயாராகும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் முகாம்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.