ETV Bharat / city

தி.மலை கார்த்திகை தீபம்: பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு மனு தாக்கல் செய்ய உத்தரவு

author img

By

Published : Nov 18, 2021, 2:01 PM IST

thiruvannamalai karthigai deepam, chennai high court news, court news tamil, girivalam thiruvannamalai, girivalam, திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை, அண்ணாமலையார், திருவண்ணாமலை கார்த்திகை தீபம், கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்களையும் அனுமதிப்பது தொடர்பாக இன்று (நவம்பர் 18) பகல் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இந்து மக்கள் கட்சி மாநிலச் செய்தித் தொடர்பாளர் டி. செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, இந்து மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகிறது. இந்து சமய அறநிலையத்துறையும், இந்து மதத்தின் வளர்ச்சிப் பணிகளைச் செய்யாமல் எதிராகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டு, பின்னர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு கோயில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மகா கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது தவறானது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பக்தர்களுக்கு அனுமதி வேண்டும்

கரோனா கட்டுப்பாடுகளை நீக்கி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்டவற்றில் அனைவரும் அனுமதிக்கப்படும்போது, கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவம், காவல், தீயணைப்பு, மின்சாரம், குடிநீர் போன்ற உரிய ஏற்பாடுகளுடனும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும், கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடனும், அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டுமென, நவம்பர் 6 அன்று அளித்த மனுவை முறையாகப் பரிசீலித்து முடிவெடுக்க அரசு, மாவட்ட நிர்வாகம், காவல் துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாது

அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் முன்னிலையாகி, "நேற்றுவரை 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். தீபத் திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கு மேலானவர்கள் வருவார்கள். மூன்று லட்சம் பேர் கிரிவலம் செல்வார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது" எனத் தெரிவித்தார்.

மேலும், மூன்று நாள்களுக்கு உள்ளூரைச் சேர்ந்த மூன்றாயிரம் பேரையும், வெளியூரைச் சேர்ந்த ஏழாயிரம் பேரையும் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் தற்போதும் பின்பற்றுவதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

அனைத்து மாநிலங்களிலும் அனுமதிக்கப்படும்போது, தமிழ்நாட்டிலும் திருவிழா கால தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனவும், குறைந்தது 20 ஆயிரம் பக்தர்களையாவது அனுமதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டது.

பின்னர், அரசுத் தரப்பில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதிக்கலாம் என்றும், இன்றும் நாளையும் கிரிவலத்திற்கு உள்ளூரைச் சேர்ந்த ஐந்தாயிரம் பக்தர்கள், வெளியூரைச் சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயிலுக்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், மாநில அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்தியதுடன், அரசின் விளக்கத்தை மனுவாகத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று மதியம் 2.15 மணிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: கார்த்திகை தீபம் (Karthigai Deepam): நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.