ETV Bharat / city

திருடிய சிலைகள் கருவறைக்குள் பதுக்கல்; கோயில் குருக்கள் கைது

author img

By

Published : Mar 16, 2022, 10:21 PM IST

சிலை திருட்டு
சிலை திருட்டு

ஒரு கோயிலின் சிலைகளை மற்றொரு கோயில் கருவறைக்குள் திருடி மறைத்து வைத்திருந்த வழக்கில் குருக்கள் சூர்யமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் மன்னங்கோயில் கிராமத்திலுள்ள மன்னார்சாமி-நல்லகாத்தாயி கோயிலுக்குச் சொந்தமான ஸ்ரீநல்லகாத்தாயி அம்மன், ஸ்ரீ கஞ்சமலையீஸ்வரர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ விநாயகர் ஆகிய 4 சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்து திருடப்பட்டுவிட்டதாகவும், உடனடியாக கண்டுபிடித்துத் தரக்கோரி ஏனாக்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவர் சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் பேரில், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் தனிப்படை அமைத்துக் காணாமல் போன சிலைகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக, சீர்காழி அருகே நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த குருக்கள் சூர்யமூர்த்தி என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

சிலையோடு சிலையாக மறைப்பு

விசாரணையில், நெம்மேலி விசாலாட்சி-விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள விசாலாட்சி அம்மன் சிலைக்குப் பின்புறம் பிரதோஷ நாயக பிரதோஷ நாயகி உலோகச்சிலை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும், இந்து சமய அற நிலையத்துறையின் உரிய அனுமதி பெறாமல் சூர்யமூர்த்தி வீட்டில் கணக்கில் இல்லாத காத்தாயி அம்மன் வெள்ளிக்கவசம், சிறிய வெள்ளி குத்துவிளக்கு 2, சிறிய வெள்ளிகுடம் 1 மற்றும் சனீஸ்வரன் வெள்ளிக்கவசம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல் துறை விசாரணை

இதனையடுத்து சிலைகளைத்திருடி மறைத்து வைத்ததாக சூர்யமூர்த்தியை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பிரதோஷ நாயகர், நாயகி சிலைகளை எவரும் நுழைய முடியாத விசாலாட்சி அம்மன் கோயில் கருவறையில் மறைத்து வைத்து, ரூபாய் 2 கோடிக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சூர்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதோஷ நாயகர், நாயகி சிலைகள் எந்த கோயிலைச் சேர்ந்தது என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மூன்று தோழிகள்: ஒரே பெயர், ஒரே படிப்பு, ஒரே வேலை,அதுவும் ஒரே இடத்தில்... அடடே என்ன ஒற்றுமை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.