ETV Bharat / city

'மருத்துவப் படிப்பிற்கான இன்டர்ன்ஷிப் விகிதத்தை 20% ஆக்குங்கள்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Apr 19, 2022, 9:52 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

'வெளிநாடு மாணவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் செய்வதை 7.30% லிருந்து 20% ஆக உயர்த்தினால் 1,010 மாணவர்கள் இங்கு இன்டர்ன்ஷிப் செய்ய முடியும். வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்' என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.19) வேல்முருகன் எம்எல்ஏவின் கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் இன்று (ஏப்.19) பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன், வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் செய்ய தனியார் மருத்துவ கல்லூரிகளில் ரூ.5 லட்சமும், மாவட்ட மருத்துவ கல்லூரிகளில் ரூ.2.50 லட்சமும் கேட்கின்றனர். இதன் காரணமாக வெளிநாடு மருத்துவ மாணவர்கள், இங்கு இன்டர்ன்ஷிப் செய்வதில் பிரச்னை உள்ளது என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

மருத்துவ மாணவர்கள் இன்டர்ன்ஷிப்: இதற்குப் பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இளநிலை மருத்துவப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் இங்கே இன்டர்ன்ஷிப் செய்வதில் பிரச்னை இருப்பது உண்மை. அப்படி செய்ய வேண்டும் என்றால் துறை ரீதியாக கட்டாய மருத்துவ பயிற்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அந்த மாணவர்களைப் பொறுத்தவரை, படிப்பு முடித்த பிறகு இங்கே FMSE தேர்வு எழுத வேண்டும்.

பிரதமரிடம் கோரிக்கை: தேர்வு எழுதிய பிறகு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பெயர்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு CRMI பயிற்சிக்குச் செல்ல வேண்டும். ஆனால், கடந்த நவம்பர் மாதம் 10% வெளிநாடு மருத்துவ மாணவர்கள் இங்கு இன்டர்ன்ஷிப் செய்யவதை 7.30% ஆக மத்திய அரசு குறைத்து விட்டார்கள். இது மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், 7.30%லிருந்து 20%ஆக உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாகவும், நேரில் பிரதமரை சந்தித்தும் கோரிக்கை வைத்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஆன்லைனில் படிப்பு: ஆனால், இன்றைய அளவு சரியான தீர்வு காணப்பட வில்லை. அப்படி தீர்வு காணப்பட்டால் 1010 மாணவர்கள் இங்கே இன்டர்ன்ஷிப் செய்ய வசதியாக இருக்கும் எனத் தெரிவித்தார். பேரிடர் காலத்தில் ஆன்லைன் வழியாக வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களை இங்கு இன்டர்ன்ஷிப் செய்ய அனுமதிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவர்கள் வேறு வழியில்லாமல் ஆன்லைனில் மருத்துவம் படித்தார்கள்.

தமிழ்நாட்டிலேயே படிக்க வாய்ப்பு: அவர்களை இன்டர்ன்ஷிப் செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்று அதற்குத் தடை வாங்கியது. அதன்படி, ஆன்லைன் வாயிலாக வெளிநாடுகளில் படித்தவர்கள் இங்கு இன்டர்ன்ஷிப் செய்யத் தடை வாங்கியது. இதையெல்லாம் வலியுறுத்தி முதலமைச்சர் பிரதமர் மோடியிடம் 10% லிருந்து 20%ஆக உயர்த்த வேண்டும், ஆன்லைன் வழியாக மருத்துவம் படித்தவர்களுக்கு இன்டர்ன்ஷிப் செய்ய அனுமதிக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தியுள்ளார். இதில் விரைவில் அவர்கள் நடவடிக்கை ஏதேனும் எடுப்பார்கள் என நம்புகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கால்நடை பராமரிப்பு துறை மானியக் கோரிக்கை மீதான புதிய 16 அறிவிப்புகள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.