ETV Bharat / bharat

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கர்னூல் எம்பி; ஆந்திர அரசியலில் அடுத்தடுத்து சலசலப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 1:55 PM IST

YSR Congress Kurnool MP Sanjeev Kumar resigns
கர்னூல் எம்பி சஞ்சீவ் குமார்

YSRCP: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கர்னூல் எம்பி ராஜினாமா செய்துள்ளது, ஆந்திரா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரப் பிரதேசம்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் ஏப்ரல், மே மாதங்களில் அடுத்தடுத்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சிகள் தங்களது வியூகத்தை வகுத்து வருகின்றன.

இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு, 10 நாட்களில் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இருந்து விலகிய அம்பதி ராயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கர்னூல் எம்பியும், முதன்மை உறுப்பினருமான சஞ்சீவ் குமார், ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார். பொது மருத்துவரும், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணருமான சஞ்சீவ் குமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், கட்சி பொறுப்பாளர்களை மாற்றும் நடவடிக்கையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ராஜினாமா செய்யும் முடிவு குறித்து அறிவித்த சஞ்சீவ் குமார், “கட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மரியாதை இல்லை. என்னிடம் எம்பி பதவி மட்டும்தான் உள்ளது, தன்னிடம் வரும் மக்களின் குறைகளைத் தீர்க்கும் அதிகாரம் இல்லை. பின்தங்கிய மாவட்டமான கர்னூல் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான தனது கனவு திட்டங்களில் கட்சி கவனம் செலுத்தவில்லை.

வறட்சியால் பாதிக்கப்படும் கர்னூல் மாவட்டத்தில் விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்காகவும், வாழ்வாதாரத்திற்காக தொழிலாளர்கள் இடம்பெறுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கர்னூலில் இருந்து அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெல்லாரி வரை, தேசிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டது.

எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு 50 சதவீத பதவிகளை வழங்கியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கூறினாலும், சமூக நீதி இல்லை” எனத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்வதும், வேறு கட்சிகளில் இணைவதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள எம்பி சஞ்சீவ் குமார், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தும், எம்பி பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த விஜயவாடா எம்பி கேசினேனி நானி, ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் அரசியல் காய் நகர்த்தும் அம்பதி ராயுடு - பவன் கல்யாண் உடன் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.