ETV Bharat / bharat

மீண்டும் அரசியல் காய் நகர்த்தும் அம்பதி ராயுடு - பவன் கல்யாண் உடன் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 8:56 AM IST

Updated : Jan 11, 2024, 9:36 AM IST

Ambati Rayudu: அம்பதி ராயுடு ஜனசேனா கட்சி அலுவலகத்தில் பவன் கல்யாணுடன் 3 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, ஆந்திர அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவன் கல்யாணுடன் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய அம்பதி ராயுடு
பவன் கல்யாணுடன் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய அம்பதி ராயுடு

ஆந்திரப் பிரதேசம்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணைச் சந்தித்து பேசினார். குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி ஜனசேனா கட்சி அலுவலகத்தில், ராயுடு மற்றும் பவன் கல்யாண் இருவரும் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளர். அம்பதி ராயுடு சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது, ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது.

அம்பதி ராயுடு குண்டூர் அல்லது பல்நாடு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக, ஜனசேனா உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாணுடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அம்பதி ராயுடு ஊடகத்தினரைச் சந்திக்காமல் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, அம்பதி ராயுடு தனது எக்ஸ் பக்கத்தில், “நான் முழு மனதுடன் ஆந்திர மக்களுக்காக சேவை செய்ய அரசியலுக்கு வந்தேன். நான் எனது கனவை நிறைவேற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். நான் பல கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் பிரச்னைகளை அறிந்து கொண்டு, அதனை சரி செய்ய என்னால் முடிந்த பல உதவிகளை செய்தேன். ஆனால், ஒரு சில காரணங்களால் எனது கனவுடன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியவில்லை. எனது கொள்கையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கொள்கையும் ஒத்து போகவில்லை.

அதற்கு அவர்களை குறை கூற விரும்பவில்லை. அதனால் அரசியலில் இருந்து விலக முடிவெடுத்தேன். எனது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அரசியலில் இருந்து விலக முடிவெடுக்கும் முன்பு, பவன் கல்யாணைச் சந்தித்து ஒரு முறை பேசும்படி அறிவுரை கூறினர். ஆகையால், பவன் கல்யாணைச் சந்தித்து அவருடன் வாழ்க்கை, அரசியல் குறித்து பல மணி நேரம் விவாதித்தேன்.

எங்கள் இருவரது கொள்கையும் ஒத்துப்போவது மகிழ்ச்சி. நான் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளுக்காக துபாய் செல்லவுள்ளேன். நான் எப்போதும் ஆந்திர மக்களுக்காக குரல் கொடுப்பேன்” என பதிவிட்டுள்ளார். அம்பதி ராயுடு சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பத்து நாட்களுக்குள் விலகுவதாக அறிவித்தது பேசு பொருளானது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அம்பதி ராயுடுவிற்கு கட்சியில் பதவி தருவதாக கூறி ஏமாற்றியதால், அவர் பவன் கல்யாணை சந்தித்துப் பேசியதாக செய்திகள் வலம் வருகிறது. அம்பதி ராயுடு அரசியலில் இருந்து விலகியதற்கு பல்வேறு வகையில் விமர்சனத்திற்கு உள்ளானார்.

அதனைத் தொடர்ந்து, அம்பதி ராயுடு அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில், “ சர்வதேச துபாய் டி20 லீக்கில் ஜனவரி 20ஆம் தேதி பங்கேற்கவுள்ளேன். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும்போது அரசியலில் இருந்து விலக வேண்டியது எனக்கு தேவையாக உள்ளது” என கூறியுள்ளார். அம்பதி ராயுடு பவன் கல்யாணைச் சந்தித்ததை தொடர்ந்து, அவர் மீண்டும் அரசியலில் குதிப்பார் என அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: கிளம்பும் சர்ச்சைகள்.. 1990 துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் சமாஜ்வாதி தலைவர்! என்ன நடந்தது?

Last Updated : Jan 11, 2024, 9:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.