ETV Bharat / bharat

West Bengal: இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்து - ரயில்வே விளக்கம்

author img

By

Published : Jun 25, 2023, 8:16 AM IST

Updated : Jun 25, 2023, 10:59 AM IST

West Bengal: இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்து
West Bengal: இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்து

மேற்குவங்க மாநிலத்தின் பாங்குராவில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

பாங்குரா: மேற்குவங்க மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தில் உள்ள ஓண்டா ரயில் நிலையத்தில் ரயில்வே பராமரிப்பு ரயில் உடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக கரக்பூர் - பாங்குரா - ஆத்ரா வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், இது குறித்து தெற்கு மத்திய ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பு அலுவலர் கூறுகையில், “ரயில்வே பராமரிப்பு ரயில் ஓண்டா ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, சரக்கு ரயில் சிவப்பு சிக்னலை கடந்து நிற்காமல் சென்றது. இதனால் சரக்கு ரயில், ரயில்வே பராமரிப்பு ரயில் உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

அதிகாலை 4.05 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 8 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு உள்ளன. மேலும், இதன் சீரமைப்புப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம், யுபி மெயின் லைன் மற்றும் யுபி லூப் லைன் ஆகியவை காலை 7.45 மணியளவில் சீரமைக்கப்பட்டது” எனத் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, இந்த சரக்கு ரயில்கள் விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது. அந்த வீடியோவில் ஏராளமான பெட்டிகள் தடம் புரண்டது போன்று இருந்தது. முன்னதாக, கடந்த ஜூன் 17ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்பாடோலா அருகில் சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.

இதனையடுத்து, தடம் புரண்ட 4 பெட்டிகளும், வேதாந்தா லிமிடெட் பிளாண்ட்டின் சிறப்பு வழித்தடத்தில் தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கடந்த ஜூன் 2ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகில் 3 ரயில்கள் கோர விபத்தில் சிக்கியது.

சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்களும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்து 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்பட பலரும் நேரில் வந்து பார்வையிட்டனர். அதேநேரம், இந்த ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஒடிசா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 292-ஆக உயர்வு!

Last Updated :Jun 25, 2023, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.