ETV Bharat / bharat

ஜி20 நாடுகளின் 18வது உச்சி மாநாடு - இந்தியா சாதித்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 8:20 PM IST

Updated : Sep 13, 2023, 8:36 AM IST

G20 summit
G20 summit

India G20 summit: டெல்லியில் நடந்து முடிந்து உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜி20 மாநாட்டின் கடந்து வந்த பாதை மற்றும் அதில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் குறித்து ஓய்வு பெற்ற இந்திய வெளியுறவு சேவை அதிகாரி ஜேகே திரிபாதி அளிக்கும் சிறப்புத் தகவல்களை பார்க்கலாம்..

ஹைதராபாத்: இந்தியா தலைமையில், தலைநகர் டெல்லியில் கடந்த 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடந்த ஜி 20 நாடுகளின் 18வது உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்து உள்ளது. ஜி 20 நாடுகளின் 19வது உச்சி மாநாடு, அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெற உள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆசிய உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா உட்பட 48 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் பொருளாதாரம் கடந்த 1997 முதல் 98ஆம் ஆண்டுகளில் நிதி நெருக்கடியில் சிக்கி வந்தது. இதை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு என்பது அனைத்து நாடுகளுக்கும் தேவை என்ற நோக்கத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு முயற்சியால் கடந்த 1999ஆம் ஆண்டு ஜி20 நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி தலைவர்களுக்கான முறைசாரா மன்றமாக இருந்த நிலையில், அது காலப்போக்கில் வளர்ச்சி பெற்றது. தொடர்ந்து கடந்த 2007ஆம் ஆண்டு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை சரிகட்டும் நோக்கத்தில் ஜி20 குழு மேம்படுத்தப்பட்டது. இதில், உலக அளவில் பணக்கார நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளையும், ஆசிய நாடுகளின் தலைவர்களையும் கொண்ட பலமிக்க குழுவாக உருவானது.

ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு, கடந்த 2022ஆம் ஆண்டு, இந்தோனேஷியா நாட்டில் நடைபெற்றது. பின்னர், அதே ஆண்டு நவம்பர் மாதம், அதற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களுக்கிடையே, இந்த மாநாட்டை, இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்து, சர்வதேச நாடுகளின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்து உள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் சுற்றுலாத்துறை கூட்டத்தில் சீனா, சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்காதது மற்றும் ஜி 20 வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில், நேட்டோ நாடுகளுக்கிடையே அதிருப்தி ஏற்பட்டது உள்ளிட்ட காரணங்களால், துவக்கத்திலேயே சுணக்கம் ஏற்படத் துவங்கியது.

ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக சுரண்டும் நிகழ்வு, சர்வதேச நாடுகளுக்கிடையே நிகழும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், உள்ளிட்ட பிரச்சனைகள் நிறைந்த இன்றைய சூழ்நிலையில், இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றை இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முதற்கட்டமாக,தெற்கின் குரல் என்ற தலைப்பில் 125 மிகவும் வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டு, விர்சுவல் கூட்டங்களை முன்னெடுத்தது. கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார நிபுணர்கள், என் ஜி ஓ நிறுவனங்கள் உள்ளிட்டோர்களைக் கொண்டு, 60க்கும் மேற்பட்ட நகரங்களில் கூட்டங்களை நடத்தியது.

டெல்லி ஜி20 பிரகடனம் குறித்த உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்தை, செப்டம்பர் 9ஆம் தேதி, அதிகாலை 04.30 மணிவரை எட்டப்படவில்லை. பின்னர் அமிதாப் காந்த் உள்ளிட்ட அதிகாரிகளின் கடினமான பணிகளால், இந்த பிரகடனம் நிறைவேற்றப்பட்டதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

ஜி20 நாடுகளின் 18வது உச்சி மாநாட்டில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் தொடர்பான விவகாரத்தில், டெல்லி ஜி20 பிரகடனத்தில் மென்மையான கருத்துகளே இடம்பெற்று இருந்தது. இந்த மாநாட்டில், தோல்வியாளர் என்று உக்ரைனை வேண்டுமானால் சொல்லலாம்.

இதற்கு முன் ஜி 20 நாடுகளின் மாநாடுகளை நடத்தி உள்ள நாடுகள், மிகக் குறைந்த பொருட்செலவிலேயே நடத்தி முடித்து உள்ள நிலையில், இந்தியா மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபம் உள்ளிட்ட வசதிகளுக்காக, ரூ. 2,700 கோடிகள் வரை செலவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினர் இடத்தை, ஆப்பிரிக்க யூனியனுக்கு இந்தியா வழங்கி கவுரவித்து உள்ளது. இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், இத்தாலி, கிரீஸ் நாடுகளின் வழியாக அமெரிக்காவிற்கு கடல் மற்றும் ரயில் போக்குவரத்து வழித்தடங்களை அமைக்க இதில் முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது போக்குவரத்து செலவை குறைப்பதோடு மட்டுமல்லாது, ஜி20 நாடுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

டெல்லி ஜி20 நாடுகள்ன் உச்சிமாநாடு, இந்தியாவின் மணிமகுடத்தில் வைக்கப்பட்ட மற்றொரு வைரக்கல் என்றே சொல்ல வேண்டும். இந்த மாநாட்டின் இறுதி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக, நவம்பர் மாதத்தில்,. பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டு உள்ள அடுத்த மெய்நிகர் உச்சிமாநாட்டின் மூலம் தான், இதன் உண்மை செயல்திறன் மதிப்பிடப்படும் என்று, திரிபாதி குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா - சவுதி அரேபியா இடையே உறுதியான உறவு.. இரு நாட்டு தலைவர்கள் ஆலோசனை!

Last Updated :Sep 13, 2023, 8:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.