ETV Bharat / bharat

மிசோரமில் தோல்வியைச் சந்தித்த துணை முதலமைச்சர்..! ஆட்சியைக் கைப்பற்றுகிறதா சோரம் மக்கள் இயக்கம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 1:15 PM IST

Updated : Dec 4, 2023, 4:36 PM IST

mizoram assembly election result 2023
மிசோரம் தேர்தல்

Mizoram Assembly Election Result: மிசோரம் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை பணி இன்று நடைபெற்று வரும் நிலையில், அங்கு சோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மைக்குத் தேவையான அளவு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஐஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபைக்குக் கடந்த மாதம் 7ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அம்மாநிலத்தில் 1,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் மொத்தமாக 77.66 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இங்கு ஆளும் கட்சியாக மிசோ தேசிய முன்னணி (MNF) செயல்பட்டு வருகிறது. அம்மாநில முதலமைச்சராக ஜோரம்தங்கா செயல்பட்டு வருகிறார். இங்கு சோரம் மக்களின் இயக்கம் (Zoram People’s Movement-ZPM) மற்றும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முக்கிய எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் மிசோரம் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி டிச.03 நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஆனால் அம்மாநிலத்தில், கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்துக்குச் சென்று பிரார்த்தனை மேற்கொள்வது வழக்கம். இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையை நாளை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்ற தேர்தல் ஆணையம் டிச.4 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 தொகுதிகளைக் கைப்பற்றவேண்டும்.

இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியை விட எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மைக்குத் தேவையான அளவு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 1 மணி நிலவரப்படி சோரம் மக்களின் இயக்கம் கட்சி 27 தொகுதிகளிலும், ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மேலும், பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில் தூய்சாங் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநிலத்தின் துணை முதல்வர் டவன்லூயா தோல்வியைச் சந்தித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆட்சி அமைக்க 21 தொகுதிகளைக் கைப்பற்றவேண்டும் என்ற நிலையில் சோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோ போல் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "அண்ணன் விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்" - நடிகர் சூர்யா

Last Updated :Dec 4, 2023, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.