ETV Bharat / bharat

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க "ஆன்டி ரேப் ஸ்மார்ட் ஃபுட் வேர்" - பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

author img

By

Published : Nov 30, 2022, 8:32 PM IST

Kalaburagi
Kalaburagi

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமையை தடுக்கும் நோக்கிலும், பெண்களின் பாதுகாப்புக்காகவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய "ஆன்டி ரேப் ஸ்மார்ட் ஃபுட் வேர்"-ஐ கண்டுபிடித்துள்ளார்.

கலாபுரகி: நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகள் தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கலாபுரகியைச் சேர்ந்த பள்ளி மாணவி, பெண்களின் பாதுகாப்புக்காக 'ஆன்டி ரேப் ஸ்மார்ட் ஃபுட் வேர்'-ஐ வடிவமைத்துள்ளார்.

ஸ்மார்ட் காலணிகள்
ஸ்மார்ட் காலணிகள்

விஜயலட்சுமி பிரதாரா என்ற மாணவி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பெண்களின் பாதுகாப்புக்காக தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் காலணிகளை வடிவமைத்துள்ளார்.

இதில் 'பிளிங்க் ஆப் லிங்க்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலணியில் ஷாக் அடிக்கும் தொழில்நுட்பமும், மற்றொன்றில் ஜிபிஎஸ் மூலம் செய்தி அனுப்பும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிட்டால், காலணியில் உள்ள பட்டனை அழுத்தினால், வன்கொடுமை செய்ய முயற்சிக்கும் நபர் மீது 0.5 ஆம்ப்ஸ் மின்சாரம் பாயும். இந்த ஷாக்கில் இருந்து அந்த நபர் மீண்டு வருவதற்குள் அந்த பெண் அங்கிருந்து தப்பிவிட முடியும்.

ஸ்மார்ட் காலணிகள்
ஸ்மார்ட் காலணிகள்

அதேபோல் 3 அல்லது 4 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டால், ஜிபிஎஸ் வசதி கொண்ட மற்றொரு காலணியில் உள்ள பட்டனை அழுத்தினால், லைவ் லொக்கேஷனுடன் அபாய செய்தியை பெற்றோருக்கும் காவல்துறைக்கும் அனுப்பப்படும். அவசர காலங்களில் குறுஞ்செய்திகளை அனுப்பவும், அதற்கான செல்போன் எண்களை சேமித்து வைக்கவும், இந்த காலணிகளில் வசதி உள்ளது.

இந்த காலணிகளில் சிக்கலான சர்க்யூட்கள் எதுவும் நிறுவப்படவில்லை, அதனால் அணிபவர்களுக்கு ஷாக் அடிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன- இதனால் இவற்றை அணிந்து கொண்டு நடக்கும்போது பேட்டரிகள் தாமாகவே சார்ஜ் ஆகும்.

மாணவி விஜயலட்சுமி, தனது அறிவியல் ஆசிரியை சுமையா கான் உதவியுடன் 13 மாதங்களாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, இந்த ஸ்மார்ட் காலணிகளை கண்டுபிடித்துள்ளார். சுமார் மூவாயிரம் ரூபாய் செலவில் இவற்றை உருவாக்கியுள்ளார். இந்த ஸ்மார்ட் காலணிகளை அரசு பெற்றுக் கொண்டு, ஆராய்ச்சி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என மாணவி விஜயலட்சுமி மற்றும் அவரது ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆசிரியையுடன் மாணவி விஜயலட்சுமி
ஆசிரியையுடன் மாணவி விஜயலட்சுமி

மாணவியின் இந்த கண்டுபிடிப்பு, அண்மையில் கோவாவில் நடைபெற்ற "இந்தியா இன்டர்நேஷனல் இன்வென்ஷன் அண்ட் இன்னோவேஷன் எக்ஸ்போ 2022"-ல் வெள்ளிப் பதக்கம் வென்றது. மேலும், 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் கண்காட்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 6 மாநிலம் 6 கல்யாணம்..? சோட்டு குமாரின் சில்மிஷம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.