ETV Bharat / bharat

டெல்லியில் குரங்கம்மை: பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

author img

By

Published : Jul 24, 2022, 12:02 PM IST

டெல்லியில் குரங்கம்மை
டெல்லியில் குரங்கம்மை

டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி: நாட்டில் முதல் குரங்கம்மை நோய் பாதிப்பு கடந்த ஜூலை 15ஆம் தேதி கேரளாவில் பதிவானது. தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக்கத்தில் இருந்து கேரளா வந்த இருவருக்கு அடுத்தடுத்து குரங்கம்மை இருப்பது உறுதியானது.

பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த நிலையில், கேரளா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த 31 வயதான ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இன்று (ஜூலை 24) கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட புண்கள் காரணமாக மூன்று நாள்களுக்கு முன்னர் டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவரின் பரிசோதனை மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர் வெளிநாடுகளுக்கு எங்கும் பயண செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றது தெரியவந்துள்ளது.

முன்னதாக, உலகம் முழுவதும் பரவிவரும் குரங்கம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று (ஜூலை 23) அறிவித்தது. குரங்கம்மை நோய் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பரவும். இதனால், புண்கள், தோல் பாதிப்புகள் ஏற்படும் என்றும் இதன் மூலமும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு குரங்கம்மை நோய் பரவுகிறது.

இதுவரை உலக முழுவதும் 75 நாடுகளில் 16 ஆயிரம் பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியாவை தவிர்த்து தாய்லாந்தில் மட்டும் ஒருவருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச அவசர நிலையாக குரங்கம்மை நோய் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.