ETV Bharat / bharat

கர்நாடக கோவிட்-19 : நிறம் மாறும் உடுப்பி, சாமராஜநகர்

author img

By

Published : Jun 9, 2020, 10:52 PM IST

கர்நாடக கோவிட்-19 : உடுப்பி - சாமராஜநகர் நிறம் மாறும் விளையாட்டு!
Covid-19: Udupi and Chamarajanagar - A case in contrast

பெங்களூரு : ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து பச்சை மண்டலமான உடுப்பி மாவட்டத்தில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகளாவிய பெருந்தொற்றான கோவிட்-19 இந்தியாவில் தீவிரமடைவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டதாக அறிய முடிகிறது.

குறிப்பாக, மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லைப் பகுதிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையிலிருந்து உடுப்பி மாவட்டம் திருப்பியவர்களால் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இப்போது, ​​கோவிட் -19 பாதிப்பில் மாநில அளவில் உடுப்பி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

உடுப்பியைச் சேர்ந்தவர்கள் வேலைத் தேடி மும்பைக்கு செல்வது காலம்காலமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மும்பையில் பணியாற்றிவரும் உடுப்பி மாவட்ட மக்கள், அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதை தவிர்க்க முடியாது என்பதே உண்மை.

தற்போது, மும்பை மற்றும் பிற நாடுகளில் (முக்கியமாக வளைகுடா நாடுகள்) இருந்து உடுப்பி மாவட்டத்திற்கு திரும்புகிறவர்களை விதிமுறைகளின் படி தனிமைப்படுத்தி வைத்து, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி வைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது.

சில நாள்களுக்குள் கோவிட்-19 பாதிப்பை முழுமையாக குறைத்து உடுப்பியை மீண்டும் பச்சை மண்டலமாக மாற்ற நினைத்திருந்த மாவட்ட நிர்வாகத்திற்கு மும்பையிலிருந்து உடுப்பிக்குத் திரும்ப அனுமதி கோரிவரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தலைவலியாக இருக்கிறது.

அதே நேரத்தில், சிவப்பு மண்டலமாக இருந்த எல்லை மாவட்டமான சாமராஜநகர், மாவட்ட நிர்வாகத்தால் முழுமையாக பச்சை மண்டலமாக மாறியுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான கோவிட் -19 பாதிப்புகளைக் கொண்ட கேரளா மற்றும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சாமராஜநகர் மாவட்ட நிர்வாகத்தின் எல்லைகள் மூடல், சோதனைச் சாவடிகள் அமைத்து கரோனா கண்டறிதல் சோதனைகள் நடத்தியது போன்ற விரைவான நடவடிக்கைகளின் காரணமாக கோவிட்-19 பாதிப்பு குறைக்கப்பட்டது.

கோவிட்-19 சிறப்பு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், தாலுக்கா மற்றும் மாவட்டம் வாரியாக மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே திறக்கப்பட்டன. பின்னர், மாவட்ட நிர்வாகம் மாநிலங்களுக்கு இடையேயான வாகனங்களின் இயக்கத்தை தடைசெய்து தைரியமான நடவடிக்கை எடுத்தது. மகாராஷ்டிராவிலிருந்து மாவட்டத்திற்கு திரும்பும் மக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.

மக்கள் பிற இடங்களிலிருந்து தங்கள் கிராமங்களுக்கு செல்வது குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தே பயணத்தை மேற்கொண்டனர். சாமராஜநகர் மாவட்டத்திற்குள் தேவையின்றி மற்றவர்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கோவிட்-19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறை மற்றும் மாவட்ட சுகாதாரத் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இவற்றின் விளைவாக, இன்று (ஜூன் 9) மாநிலத்தில் கோவிட் இல்லாத மாவட்டமாக சாமராஜநகர் மாவட்டம் விளங்குகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.