ETV Bharat / bharat

ட்விட்டரை கண்காணிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

author img

By

Published : May 21, 2020, 4:54 PM IST

bjp-leader-files-pil-in-sc-against-anti-india-content-on-twitter
bjp-leader-files-pil-in-sc-against-anti-india-content-on-twitter

டெல்லி: போலி ட்விட்டர் கணக்குகள் மூலம் வெறுப்பை விதைக்கும் செய்திகள், விளம்பரங்களைச் சரிபார்க்கும் வழிமுறையைக் கண்டறியக் கோரி பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் போலி கணக்குகள் மூலம் வெறுப்பை விதைக்கும் கருத்துக்கள், விளம்பரங்கள் ஆகியவற்றைச் சரிபார்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய உத்தரவிட வேண்டும் என பாஜகவின் வினித் கோயங்கா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ''இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவால் ட்விட்டர் நிர்வகிக்கப்படவில்லை. அதனால் அதில் பதிவிடப்படும் கருத்துக்களைச் சமாளிக்க பிரத்யேக சட்டம் தேவை.

ட்விட்டரில் பதிவிடப்படும் வெறுப்பு கருத்துக்களைக் கையாளுவதற்கு எந்தச் சட்டமும் இல்லாத நிலையில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை ட்விட்டர் ஊக்குவித்து வருகிறது. இதுபோன்ற கருத்துக்களை ஊக்குவித்ததற்காக ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும்.

அதேபோல் போலி ட்விட்டர் கணக்குகள் மூலம் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு அனுதாபம் கோரப்பட்டு வருகிறது. ஐஎஸ்ஐஎஸ், அல்-கய்தா உள்ளிட்ட அமைப்புகள் ட்விட்டர் கணக்குகள் மூலம் இந்தியாவுக்கு எதிரான வெறுக்கத்தக்க உரைகளைப் பதிவிடுகின்றன.

போலி கணக்குகள் மூலம் பதிவிடப்படும் வீடியோக்கள் அதிகமாக வலம்வருவதால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதோடு, கலவரங்கள் ஏற்படவும் காரணமாக அமைகிறது. அதற்கு சமீபத்தில் நடந்த டெல்லி கலவரம் மிகச்சிறந்த உதாரணம்'' எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தனியுரிமை தகவல்களை திருடுவதாக ஜூம் செயலி மீது வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.