ETV Bharat / state

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் சென்னையில் தங்கியிருந்ததாக தகவல்! - Rameswaram Cafe Blast

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 11:01 PM IST

Rameswaram Cafe Blast
Rameswaram Cafe Blast

Rameswaram Cafe Blast: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் சென்னையில் தங்கியிருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து, அவர்கள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.

சென்னை: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில், சில நபர்களைத் தேடும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், பெங்களூரு காவல்துறையினரும் தீவரம் காட்டி வருகின்றனர். மேலும், ஏற்கனவே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பல்வேறு புகைப்படங்களை ஒப்பிட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாது, கடந்த மார்ச் 11ஆம் தேதி, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபரின் புதிய புகைப்படங்களை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வெளியிட்டது. இதற்கு முன்னதாக ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளில், குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு தொப்பி அணிந்தவாறு தப்பி ஓடி வந்த மர்ம நபர் ஒருவர், சில தூரம் சென்ற பிறகு தொப்பியை அகற்றிவிட்டுச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

இதனை அடுத்து, அந்த பகுதியில் இருந்த ஒரு கழிவறையில் இருந்து அந்த தொப்பியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றி, அந்த தொப்பியில் இருந்த தலை முடியை எடுத்து டிஎன்ஏ சோதனைக்கும் அனுப்பப்பட்டு, ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் நபர்களின் குடும்பத்துடன், இந்த டிஎன்ஏ சோதனை ஒத்துப் போகிறதா என்ற கோணத்தில் சோதனைகள் நடத்தப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியது.

இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேடப்பட்டு வரும் குற்றம் சாட்டப்படும் நபரான ஷாகிப் என்பவரது முடிதான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர், இவர் குறித்து விசாரணை நடத்தியபோது, குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு கர்நாடகாவில் இருந்து கேரளா மற்றும் தமிழ்நாடு வழியாக ஆந்திர மாநிலம் நெல்லூர் சென்ற பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளனர்.

மேலும், முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா என்கிற இரண்டு நபர்களையும், கடந்த 2020ஆம் ஆண்டு ஐஎஸ் வழக்கு ஒன்றின் தொடர்பாக நான்காண்டுகளாகத் தேடப்படும் நபர்களாக ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் இவர்களுக்கு சம்பந்தம் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டாவது வாரத்தில் இருந்து பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இவர்கள் இருவரும் தங்கியிருந்ததும், அப்போதுதான் ஷாகிப் என்கிற நபர் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இந்த தொப்பியை வாங்கி உள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக காவல்துறையும் அவர்கள் இங்கு தங்கி இருந்தபோது யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தார்கள், யாருடைய உதவியில் இங்கு தங்கியிருந்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநில காவல் துறைக்கும் தகவல் கொடுத்து அவர்கள் உதவி உடன் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதோடு, இந்த வழக்கு தொடர்புடைய இருவர் குறித்தும் தகவல்கள் தெரிவித்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக வி.வி.செந்தில்நாதன் அறிவிப்பு! யார் இவர்? - BJP Karur Candidate Senthilnathan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.