ETV Bharat / state

கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக வி.வி.செந்தில்நாதன் அறிவிப்பு! யார் இவர்? - BJP Karur Candidate Senthilnathan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 10:44 PM IST

BJP Karur Candidate V.V.Senthilnathan: கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக பாஜக கரூர் மாவட்ட தலைவரும், கரூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான வி.வி.செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

vv-senthilnathan-announced-as-bjp-candidate-for-karur-parliamentary-constituency
கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக வி.வி.செந்தில்நாதன் அறிவிப்பு! யார் இவர்?

கரூர்: பாரதிய ஜனதா கட்சி சார்பில் 4வது வேட்பாளர் பட்டியல் மார்ச் 22ஆம் தேதி வெளியிடப்பட்டதில் நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, கரூர் உள்ளிட்ட 15 நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளர்களைப் பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அரசியல்வாதியும், தொழிலதிபருமான பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வீனஸ் கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் செந்தில்நாதன், கொங்கு வெள்ளாளர் வகுப்பைச் சார்ந்தவர். 20 ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்த நபராக வலம் வரும் செந்தில்நாதன், கரூரில் கிரானைட் தொழில் மற்றும் முழு நேர அரசியல் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த 2021 நவம்பர் மாதத்திற்கு முன்பு வரை அதிமுகவில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தார். இதனால், கடந்த 2011ஆம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, திமுகவைச் சேர்ந்த மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு, 68,290 வாக்குகள் பெற்று, 4541 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.

அதன் பின்னர், 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட்டதால், மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக இணைந்த தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதன் பின்னர், 2019ம் நடைபெற்ற, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், அதிமுகவில் மாவட்டச் செயலாளர் ஆகவும், அமைச்சராகவும் இருந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டபோது, அதிமுக சார்பில் மீண்டும் செந்தில்நாதன் போட்டியிட்டு, 59,843 வாக்குகள் பெற்று, 37,957 வாக்குகள் வித்தியாசத்தில், செந்தில் பாலாஜியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அதிமுகவில், அதன் பின்னர் ஏற்பட்ட உட்கட்சி விவகாரம் காரணமாக, கடந்த 2021 நவம்பர் மாதத்தில் பாரதிய ஜனதா கட்சியில், செந்தில்நாதன் இணைந்து, கரூர் மாவட்ட தலைவராக மக்கள் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் செந்தில்நாதன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராகச் செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டிருப்பது. அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கும் இடையே மும்முனையில் மக்கள் செல்வாக்கு மிக்க போட்டியாளராகப் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செந்தில்நாதன் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விளவங்கோடு இடைத்தேர்தல்; பாஜக வேட்பாளராக வி.எஸ்.நந்தினி போட்டி! - BJP Candidate V S Nanthini

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.