ETV Bharat / state

"இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பாஜகவே காரணம்” - செல்வப்பெருந்தகை சாடல்! - Congress Selvaperunthagai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 6:27 PM IST

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை(Etv Bharat)

Congress Selvaperunthagai: “5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் மாயமாகி இருப்பதற்கு பாஜகவினர் ஏன் வாய்திறக்கவில்லை? இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பாஜக தான் காரணம்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை பேட்டி (Video Credits - Chennai Reporter Solomon)

சென்னை: தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தின் முகப்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இது குறித்து உள்துறை அமைச்சகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிஷ்தா, தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களும் ஏன் வாய்திறக்கவில்லை? குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு தெரியாமல் இவ்வளவு லட்சம் கோடி போதைப் பொருள் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உளவு அமைப்புகள், கடற்படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்டவை இருக்கிறது. பாஜகவிற்கு தெரியாமல் போதைப் பொருள் எப்படி இந்தியாவிற்கு வர முடியும். பாஜகவின் ஆட்சியாளர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பாஜக தான் காரணம்.

தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டதை மட்டும் பேசும் பாஜக, இது குறித்தும் பேச வேண்டும். காவிரி விவகாரத்தில் அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது. ஒழுக்காற்றுக்குழு பாராபட்சமாக இருக்கிறது. ராணுவத்தின் உதவியுடன் தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம். பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடையப் போவதால், நோட்டாவின் கீழ் வாக்கு பெறுவதற்கு சட்டமன்றத் தேர்தலுக்கு அண்ணாமலை தயார் ஆகிறார். கிண்டியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தை தமிழ்நாடு அரசு முறையாக பராமரிக்க வேண்டும்” என்றார்.

அமேதி, ரேபரேலி தொகுதியில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறவுள்ள நிலையில், காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்காது ஏன்? அங்கு போட்டியிட காங்கிரஸ் கட்சி பயப்படுகிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்த செல்வபெருந்தகை, “பிரிட்டிஷ்காரர்களை விரட்டி அடித்தவர்கள் நாங்கள். எங்களுக்கு பயம் இல்லை” என கூறினார்.

இதையும் படிங்க: “மோடி பொருளாதார ஞானம் இருக்கும் யாரையும் சந்தித்துப் பேசவில்லை.." - சுப்பிரமணியன் சுவாமி சாடல்! - SUBRAMANIAN SWAMY CRITICIZE MODI

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.