ETV Bharat / state

நீலகிரி கோடை விழா; உதகை மலர் கண்காட்சி தேதி அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 9:08 PM IST

நீலகிரி கோடை விழா: மலர்க் கண்காட்சி, பழக்கண்காட்சி நடைபெறும் தேதிகள் அறிவிப்பு
நீலகிரி கோடை விழா: மலர்க் கண்காட்சி, பழக்கண்காட்சி நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

Ooty Summer festival 2024: உதகையில் நடைபெறும் இந்த ஆண்டு கோடை விழாவின் மலர்க் கண்காட்சி, வரும் மே 17ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மே 24ஆம் தேதி துவங்கி 26ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அறிவித்துள்ளார்.

நீலகிரி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அவ்வாறு இதமான காலநிலையை அனுபவிக்க உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்பதால், இந்த ஆண்டு கோடை விழா மலர்க் கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி மட்டும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில், வரும் மே 17ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரை 6 நாட்கள் 126வது மலர் கண்காட்சி நடைபெறும். அதேபோல், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64வது பழக்கண்காட்சி மே 24ஆம் தேதி துவங்கி, 26ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும்.

மேலும், சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் இந்த ஆண்டு முறையாக வழங்கப்படும். அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறு தானிய உணவகம் செயல்படும்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனைத் திரவிய கண்காட்சி ஆகிய கோடை விழாக்கள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் அப்ரோஸ் பேகம், “கடந்த 2023 - 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 711 சுற்றுலாப் பயணிகள் காட்டேரி பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர். அதேபோல், வரும் ஏப்ரல், மே மாதம் நடைபெற உள்ள கோடை சீசனுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் தோட்டக்கலை அலுவலர் (பொறுப்பு) சபாரத்தினம், மற்றும் பண்ணை பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், வரும் கோடை சீசனுக்கு பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுக்கள் மலர்கள் பூத்துக் குலுங்கும் என்றும், கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வரக்கூடும் என்றும், பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்கேற்ப குடிநீர், நடைபாதை, கழிப்பிடம், அமரும் நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதாகவும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதையும் படிங்க: குன்னூர் ரயில் பாதையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்; சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.