ETV Bharat / state

சாந்தன் மறைவு; "இது மரணம் அல்ல, சட்டக் கொலை" - சீமான் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 4:31 PM IST

Etv Bharat
Etv Bharat

Seeman: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் உயிரிழந்த நிலையில், இது மரணம் இல்லை எனவும், இது சட்டக் கொலை எனவும் அஞ்சலி செலுத்த வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 32 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், சாந்தன். இதனையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன், இன்று காலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில், மறைந்த சாந்தன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மலர் மாலை வைத்து சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "சுமார் 33 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் சட்டப் போராட்ட பயணம் சாந்தன் சாவைப் பார்க்கவா? விடுதலை, விடுதலை என்று போராடி சாந்தனுடைய சாவைத்தான் பார்த்து உள்ளோம். பொதுச் சிறையில் இருந்து திருப்பி கொடுஞ்சிறையில் அடைத்துள்ளார்கள், அதற்காகவா போராடினார்கள்.

சாந்தனுடைய கடைசி விருப்பம், அவரது தாயைப் பார்க்க வேண்டும் என்பது, அதைக்கூட நிறைவேற்றவில்லை. சாந்தனின் இறப்பு திரைப்படங்களில் வரக்கூடிய உச்சக்கட்ட காட்சியைப் போல உள்ளது. இன்று இரவு விடுதலையாகக் கூடிய நிலையில், இன்று காலையில் இறந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது மரணம் இல்லை, சட்டக்கொலை.

மேலும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தலைமுறையைத் தாண்டி தண்டனைகளை அனுபவித்துள்ளார்கள். மீதி உள்ளவர்களையாவது உயிரோடு அனுப்ப வேண்டும். தமிழக அரசு, சாந்தன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது இடம் ஒதுக்க வேண்டும்.

மீதி இருக்கும் 3 பேரையும் இந்த நிலைக்குத் தள்ளாமல், அவரவர் விரும்பிய நாட்டுக்கு விரைவில் அனுப்ப வேண்டும். திருச்சி சிறையில் அகதிகளாக இருக்கக்கூடிய ஜெயக்குமாரை, விரைவில் அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என அவருடைய மனைவி கோரிக்கை வைத்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சொந்த தொகுதியில் கனிமொழி பெயரை கூறாமல் கடந்த பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.