ETV Bharat / state

லஞ்ச புகார்; சேலம் பதிவாளரை எங்கு பணியமர்த்துவது? - அதிகாரிகள் முடிவெடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - Salem Registrar bribe case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 10:00 PM IST

பத்திர பதிவு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
லஞ்ச புகாரில் சிக்கிய சேலம் பதிவாளரை எங்கு பணியமர்த்துவது

Salem Registrar bribe case: லஞ்ச புகாரில் சிக்கிய சேலம் மாவட்ட பதிவாளர் பி.கனகராஜை எந்த இடத்தில் பணியமர்த்துவது என்று அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என பத்திரப் பதிவுத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சேலம் மாவட்ட பதிவாளராக பணியாற்றி வரும் பி.கனகராஜ், ஏற்கனவே சூரமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றிய போது, அவர் மீது லஞ்சப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சூரமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத 2 லட்சத்து 43 ஆயிரத்து 830 ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சார் பதிவாளர் கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே கனகராஜுக்கு பதிவாளராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு தற்போது சேலம் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரை பதிவாளர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரி சேலம் மாவட்டம், மாட்டையாம்பட்டியைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், லஞ்ச புகாரில் சிக்கிய கனகராஜை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், பதிவாளர் கனகராஜுக்கு எதிரான வழக்கில் சாட்சிகள் எவரும் இல்லாததால், வழக்கு கைவிடப்பட்டதாகவும், இருப்பினும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அரசு தரப்பில், கடந்த 2020 முதல் கனகராஜ் பல இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அதிகாரிகளை எங்கு பணியமர்த்துவது என்பது குறித்து அரசு தான் பரிசீலிக்க வேண்டுமெனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் பதிவாளர் கனகராஜ் மீதான துறை ரீதியான நடவடிக்கையில் சாட்சிகள் எவரும் அச்சுறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமை என தெரிவித்தனர். மேலும், கனகராஜை எந்த இடத்தில் பணியமர்த்துவது என்று அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் எங்களுக்குக் கொடுத்த மைக் சின்னம் வேறு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு வரும் மைக் சின்னம் வேறு - நாதக சார்பில் புகார்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.