ETV Bharat / state

கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 8:50 PM IST

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும்

Report on excavation in keezhadi: கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட முதல் இரண்டு கட்ட அகழாய்வு குறித்த 982 பக்க அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட முதல் இரண்டு கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு இன்று (பிப்.26) விசாரணைக்கு வந்த நிலையில், இன்னும் 9 மாதங்களில் மத்திய அரசு மேற்கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை, அகழாய்வுப் பணியை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் மேற்கொண்ட 3ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும் படியான கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையைத் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசிடம் தாக்கல் செய்திருந்தார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாகத் தெரிவித்துள்ளார். மேலும் கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரிய வந்தது.

கீழடியில் தற்போது 4 முதல் 9 ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் 982 பக்கம் கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு பொதுவாக வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் விய்குமார் கங்கபூர்வாலா மற்றும் இளங்கோவன் ஆகியோர் முன் இன்று (பிப்.26) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வுப் பணிகள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும், 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: கொலை வழக்கில் இருந்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ உள்ளிட்ட 12 பேர் விடுதலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.