ETV Bharat / state

“மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்போது சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்படும்” - கனிமொழி உறுதி! - kanimozhi election campaign

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 4:35 PM IST

கனிமொழி
கனிமொழி

Kanimozhi: மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்போது மக்களிடம் கருத்து கேட்டு, தெளிவான விளக்கம் கொடுத்து சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்படும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி: தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி இயக்கங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதற்காக, பார்வதி சண்முகசாமி இன்று தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கத்திற்கு வந்தார்.

அப்போது, தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் முன்னிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், கூட்டணிக்கும் அவருடைய ஆதரவைத் தெரிவித்தார்.

பின்னர், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழியிடம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடப்பது குறித்து கேட்டதற்கு, “பாஜக ஆட்சியின் போது இது போன்று தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

அவர்களோடு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும், அக்கட்சியினர் மீது வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறையினரை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மோடி தொடர்ந்து தமிழ்நாடு வருவதைப் பார்க்கும் போது அவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.

சென்னையில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு, அதேபோல தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இதுவரை நாம் சந்திக்காத வெள்ள பாதிப்பு, மக்கள் வீடுகளை இழந்தார்கள். ஆடு, மாடுகள் எல்லாமே வெள்ளத்தில் அடித்துப் போகக்கூடிய சூழலை நாம் சந்தித்தோம். அப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வராத பிரதமர், தேர்தல் நேரம் வந்தவுடன் அடிக்கடி வருகிறார்.

தூத்துக்குடியை பொறுத்தவரை, சமீபத்தில் தான் முதலமைச்சர் கிட்டத்தட்ட ரூ.16,000 கோடி முதலீட்டில் வின்ஸ்பாட் நிறுவனத்தை துவங்கியுள்ளார். இன்னும் பல தொழில் முதலீடுகள் தூத்துக்குடிக்கு வரவேண்டும் என்பதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

விரைவில் புதிய தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவார்கள். இங்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு, இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் அடுத்து மையமாக நாங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கும். அப்போது இருந்த மன்மோகன் சிங்கிற்கு கருணாநிதி கடிதம் எழுதினார்.

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இதைப் பற்றி கேள்விகளை எழுப்பி இருக்கின்றேன். முதலமைச்சர் இதை வலியுறுத்தி இருக்கிறார். 10 ஆண்டுகாலம் கடந்து இருந்தால் கூட, குலசேகரன்பட்டினம் ஒரு ராக்கெட் ஏவுதளம் எங்களால் கொண்டு வர முடிந்து இருக்கிறது.

அது மட்டுமில்லாமல், இஸ்ரோவில் வேலை செய்யக்கூடிய விஞ்ஞானிகள் முக்கியமான பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்களை சந்தித்து கோரிக்கைகளை தொடர்ந்து வைத்திருந்தேன். தூத்துக்குடியில், இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்குவதாக திட்டம் இருந்தது.

அது அப்படியே கிடப்பில் போடப்பட்டு, ஒரு வேலையும் ஆரம்பிக்கவில்லை. தற்போது இருக்கக்கூடிய அமைச்சர், ஒன்றிய அரசின் அமைச்சர்களிடம் தெரிவித்து, மறுபடியும் டெண்டர்விட்டு பணிகள் தொடங்கி, கிட்டத்தட்ட பாதி கட்டிட வேலை முடிகின்ற சூழ்நிலையில் உள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்போது மக்களிடம் கருத்து கேட்டு, தெளிவான விளக்கம் கொடுத்து சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.