ETV Bharat / state

பிரதமர் மோடி சென்னை வருகை; முழு பயண விவரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 6:28 PM IST

full-details-of-event-attended-by-pm-narendra-modi-at-chennai
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்த முழுவிவரம்..

PM Narendra Modi visit TN: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய திட்டத்தைத் துவக்கி வைக்கிறார். அதன்பின், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 4) கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய திட்டத்தை துவக்கி வைக்கிறார். அதன்பின், சென்னையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

கல்பாக்கத்தில் புதிய திட்டம் தொடக்கம் மற்றும் சென்னை பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக இந்திய விமானப்படையின் தனி விமானத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, மார்ச் 4ஆம் தேதியான நாளை மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.

மாலையில் மீண்டும் தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, தெலங்கானா மாநிலம் பேகம்பட் விமானநி லையத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடி வருகையால், சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, நாளை மதியம் இந்திய விமானப்படை தனி விமானத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார். உடனடியாக பிற்பகல் 2.50 மணிக்கு, இந்திய விமானப்படை தனி ஹெலிகாப்டரில், பிரதமர் மோடி புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு கல்பாக்கம் சென்றடைகிறார். அதன்பின்பு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மாலை 3.30 மணியிலிருந்து 4.15 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

அதன் பின்னர், மாலை 4.30 மணிக்கு கல்பாக்கத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பிரதமர் மோடி, மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

அதன்பின்பு, மாலை 5.15 மணியிலிருந்து மாலை 6.15 மணி வரை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும், பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில், பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி, ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலிருந்து காரில் புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக மாலை 6.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பின், பிரதமர் மோடி மாலை 6.35 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பட் விமான நிலையம் சென்றடைகிறார்.

பிரதமர் மோடியின் சென்னை பயணத்திட்டம் காரணமாக, சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று காலையிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள், பிரதமரின் தனி விமானம் வந்து தரையிறங்கும் இடம், பிரதமர் பயணிக்க இருக்கும் தனி ஹெலிகாப்டர் வந்து நிற்கும் இடம் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதோடு, சென்னை பழைய விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை, இன்று பிற்பகலில் இருந்து, நாளை மாலை பிரதமர் தனி விமானம் பேகம்பட் புறப்பட்டுச் செல்லும் வரையில், டெல்லி சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள், தங்களுடைய நேரடி கண்காணிப்பில் வைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும், சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் லோகாண்டோவில் இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததாக ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.