ETV Bharat / state

"முதலில் சிஏஏ திருத்தச் சட்டத்தை பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்" - எல்.முருகன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 4:29 PM IST

chennai
சென்னை

L. Murugan: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்புகள் எதுவும் இல்லை. முதலில் அதைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

"முதலில் சிஏஏ திருத்த சட்டத்தை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்" - எல்.முருகன்!

சென்னை: சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே மேலும் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் சேவையைக் குஜராத்திலிருந்து பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதனை சென்னை எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று கொடி அசைத்து வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தனர்.

பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "இன்று ரயில்வே துறையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக இது உள்ளது. ரயில்வேத் துறை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டு இருக்கிறது.

வந்தே பாரத் ரயில்கள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது. சென்னையிலிருந்து கோயம்புத்தூர், திருநெல்வேலி, மைசூர், விஜயவாடா ஆகிய இடங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. பெங்களூரிலிருந்து மதுரைக்கு அடுத்து வந்தே பாரத் ரயில் வர இருக்கிறது. இந்த நிதி ஆண்டில் மட்டும் 6,000 கோடி ரூபாய்க்கு ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று 168 ரயில் நிலையங்களில் 150 திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் லட்சியம் 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது. புல்லட் ரயிலுக்கான வேலைகள் நிறைவடைந்து விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்றைய நிகழ்ச்சியில் சென்னை எண்ணூர் - மதுரவாயல் சாலைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஸ்டிக்கர் ஒட்டுவதற்குப் பெயர் போனது திமுக ஆட்சி. பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தில் 2 லட்சத்து 70 ஆயிரம் பயனாளியின் கணக்கிற்கே அளிக்கிறோம் அதற்கு மேல் பயனாளிகள் விருப்பப்பட்டால் அவர்கள் கட்டிக் கொள்கின்றனர்.

அதேபோல் ஜல்ஜீவன் திட்டத்தில் 22 கோடி பேருக்கு வீட்டிற்குக் குடிநீர் இணைப்பு வசதி, ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட ஒவ்வொரு திட்டத்தையும் மத்திய அரசு பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிங்காரச் சென்னை என திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது" என்றார்.

தொடர்ந்து அவரிடம் சிஏஏ சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்புகள் எதுவும் இல்லை. முதலில் அதைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.