ETV Bharat / state

கோயம்புத்தூரில் பயங்கர தீ விபத்து - 52 வீடுகள் தீயில் கருகி முழுவதுமாக சேதம்! - Fire Accident In Coimbatore

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 10:50 PM IST

Updated : Apr 29, 2024, 11:09 PM IST

Fire Accident In Coimbatore
Fire Accident In Coimbatore

Fire Accident In Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டம், சென்னி வீரம்பாளையம் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் தீயில் எரிந்து சேதமாகின. சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அடுத்துள்ள சென்னி வீரம்பாளையம் பகுதியில் சுமார் 4.16 ஏக்கர் பரப்பளவில் பஞ்சமி நிலம் உள்ளது. இங்குத் தாழ்த்தப்பட்ட, வீடு இல்லாத மக்கள் சுமார் 140 பேர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இங்குக் குடிநீர், மின்விளக்கு, சாக்கடை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தக் குடியிருப்புகளை ஒட்டியுள்ள காய்ந்த புற்களில் இன்று(ஏப்.29) திடீரெனத் தீப்பற்றியுள்ளது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவெனப் பற்றி எரிந்து அருகிலிருந்த குடியிருப்பினைச் சூழ்ந்தது.

இந்த விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார், அன்னூர் நிலைய அலுவலர் சந்திரன் (பொறுப்பு), பெரியநாயக்கன்பாளையம் நிலைய அலுவலர் சுரேஷ் குமார் (பொறுப்பு) உள்ளிட்டோர் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 52 வீடுகள் முழுவதுமாக எரிந்து சேதமாயின. வீடுகளிலிருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து சேதமாகின. பகல் நேரம் என்பதால் அனைவரும் வேலைக்குச்சென்று விட்ட காரணத்தால் வீடுகளில் எவரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து அறிந்த கோவை வடக்கு வருவாய்க் கோட்டாட்சியர் கோவிந்தன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் குணசீலன் உள்ளிட்டோர் விரைந்து வந்து விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை, குடிநீர் பாட்டில்களை வழங்கினர். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,"நாங்கள் வீடு இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் பஞ்சமி நிலத்தில் குடிசை அமைத்துக் கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். ஆனால், மின் இணைப்பு, சாக்கடை, குடிநீர் இணைப்பு என எவ்வித வசதிகளும் இல்லை.

இங்கிருந்து எங்களது குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வருகின்றனர். இன்று அருகிலிருந்த காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ எங்களது குடிசைகளுக்குப் பரவியது. காற்றின் வேகம் காரணமாகத் தொடர்ந்து 52 வீடுகளுக்கும் பரவியது.

இதனால் வீட்டில் வைத்திருந்த அனைத்துப் பொருட்கள், மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் முழுவதுமாக தீக்கிரையாக்கின. இதனால் அடுத்து என்ன செய்வது? எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம். எங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே, அரசு இதனைக் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கனமழையால் தத்தளிக்கும் ஆப்பிரிக்க நாடுகள்! கென்யாவில் அணை உடைந்து 45 பேர் பலி! - Kenya Dam Collapse

Last Updated :Apr 29, 2024, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.