ETV Bharat / state

தமிழகப் பகுதிகளைக் கேரள அரசு தரப்பில் அளவீடு..? விளக்கம் அளிக்க வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 3:16 PM IST

கேரள அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம்
கேரள அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம்

Anavachal parking area issue: கேரள மாநிலம், தேக்கடியில் கேரள அரசு சார்பில் அளவீடு மேற்கொள்ளும் பணிகளைக் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி, லோயர் கேம்ப் பகுதியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி: தமிழக மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான, கேரள மாநிலம் குமுளி அடுத்த ஆனவச்சால் பகுதியில் இந்திய சர்வே ஆணையத்தைச் சார்ந்த அதிகாரிகள் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பணிகளில், தமிழக அரசுக்குச் சொந்தமான பகுதிகளைக் கேரளா அரசு சார்பில் அளவீடு செய்து வருவதாகவும், உரிய மூல ஆவணப்படங்கள் இன்றி ஒருமனதாக அதிகாரிகள் அளவீடு செய்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், நில அளவீட்டுப் பணிகளைச் செய்து வரும் அதிகாரிகளை நேரில் சந்தித்து, விளக்கம் கேட்கச் செல்வதாகக் கூறி தமிழக கேரள எல்லையில் உள்ள லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே ஒன்று திரண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், ஆய்வுப் பணி மேற்கொள்ளும் அதிகாரிகளைக் கேரள மாநிலத்திற்குச் சென்று சந்தித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் உரிய மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு கூறி விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், ஆய்வுப்பணி மேற்கொள்ளும் அதிகாரிகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, விவசாயச் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "ஆனவச்சாலில் அளவீடு மேற்கொள்ளும் இடம் நீர்பிடிப்பு பகுதிகளின் கீழ் வருகின்றன. அப்பகுதியில் தமிழக அரசின் கருத்து இல்லாமல் எப்படி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும். இதில், அரசு கவனம் செலுத்த வேண்டும். எதன் அடிப்படையில் இந்த அளவீடு பணிகள் நடைபெறுகின்றன என்பது குறித்துத் தெளிவு படுத்த வேண்டும்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த அலட்சியப் போக்கு நீடித்தால், தமிழகத்திற்கு முல்லை பெரியார் அணையிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத நிலை ஏற்படக்கூடும். மேலும், கேரள காவல்துறையினர் தரப்பில் அணைப் பகுதியில் 125க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். ஆனால் தமிழக காவல் துறையினர் ஒருவர் கூட அந்த பகுதியில் இல்லை.

தமிழக அரசு ஆனவச்சால் விவகாரத்தில் மிகவும் பிற்போக்குத் தனமாகச் செயல் பட்டு வருகின்றது. உடனடியாக அரசு உரிய அதிகாரிகளை நியமித்து, கேரள அரசு தரப்பில் நடக்கும் இந்த அளவீடு பணிகளைக் கண்காணிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு கருதி, விவசாயிகள் போராட்டம் நடத்திய பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதா அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: தமிழக கும்கிகளின் உதவியை நாடிய ஒடிசா அரசு.. காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.