ETV Bharat / state

மோடி வெற்றி பெற்றால் இந்தியா ஒரு நாடாக இல்லாமல் போகும் - திமுக பொதுக்கூட்டத்தில் பொன் முத்துராமலிங்கம் பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 12:13 PM IST

DMK member Pon Muthuramalingam criticized bjp rule in thoothukudi meeting
தூத்துக்குடியில் திமுக பொதுக்கூட்டம்

Pon Ramalingam: தூத்துக்குடியில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செயல் திட்டக் குழு உறுப்பினர் பொன் முத்துராமலிங்கம், மோடி வெற்றி பெற்றால் இந்தியா ஒரு நாடாக இல்லாமல் போகும் எனத் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்கூட்டத்தில் பொன் முத்துராமலிங்கம்

தூத்துக்குடி: ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் திமுக தலைமை அறிவித்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கான பொதுக்கூட்டம், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், திமுக செயல் திட்டக் குழு உறுப்பினர் பொன் முத்துராமலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல், மத்திய அரசு குழப்பம் ஏற்படுத்துகிறது. சட்ட மசோதாவிற்கு சம்பிரதாயப்படி கவர்னர் ஒப்புதல் கொடுக்க வேண்டும். மசோதாக்களுக்கு சரியான நேரத்தில் ஒப்புதல் கொடுப்பதில்லை என்றால், அதையும் நாம் மத்திய அரசிடம் சொல்லி இருக்கிறோம்.

அப்புறப்படுத்த வேண்டிய ஆட்சியாக பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் முதல்வர் ஸ்டாலின் யார் வர வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் என கூறினார். உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நம்முடைய முதலமைச்சருடைய குரலை எதிரொலிப்பதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.

ஜனநாயகத்திலே பாசிசம் தலை தூக்குமேயானால், அதிகாரம் குவியல் ஆக்கப்படுமேயானால், ஜனநாயகத்தில் ஒர் சர்வாதிகாரம் நிச்சயமாக உருவாகும். ஆரம்ப கட்டத்திலேயே ஹிட்லர் கூட ஜனநாயக அடிப்படையில் அந்த பொறுப்புக்கு வந்தார். ஆனால், காலப்போக்கில் அதிகார வெறி பிடித்த காரணத்தினாலேயே, அதிகாரத்தைக் குவித்து ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றி நாசிசத்திற்கு வழிவகுத்தார். அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மாண்டுபோனான். பாசிசம், நாசிசம் உலக நாடுகளில் தலைதூக்கிய வரலாறு உண்டு. தொடர்ந்த வரலாறு கிடையாது. துயரமான முடிவுகளைத்தான் சந்தித்து இருக்கிறது.

இன்றைக்கு மத்தியிலேயே ஆண்டு கொண்டு இருக்கின்ற பாஜக ஆட்சி, அதனுடைய பிரதம அமைச்சர் 10 ஆண்டுகாலமாக தொடர்ந்து ஆட்சி பொறுப்பிலேயே இருக்கிறார். அந்த 10 ஆண்டு காலத்தில் என்ன சாதித்தார்? நாட்டிற்கு என்ன புதுமை உருவாக்கினார் என்பதை கணக்கு பார்க்க வேண்டிய காலகட்டம். 10 ஆண்டு காலத்தில் மோடி என்ன செய்து இருக்கிறார் என்பதை கணக்கு பார்க்கின்ற காலகட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள், ஏன் இந்திய நாட்டு மக்கள் இன்றைக்கு இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

மோடி கடந்த 10 ஆண்டு காலத்தில் என்ன செய்து இருக்கிறார்? என்ன சாதித்து இருக்கிறார் என்ற கணக்கை சரியாக பார்த்தால்தான் எதிர்காலம் நமக்கு சரியாக இருக்கும். மோடி ஆரம்ப கட்டத்தில் என்ன சொன்னார், நல்ல ஆட்சிமுறை என்று சொன்னார். அந்த நல்ல ஆட்சி முறையை இன்றைக்கு கொண்டு வந்திருக்கிறாரா அதுமட்டுமல்ல, அவர் சொல்கிறார் வளர்ச்சி, நல்ல ஆட்சிமுறை இவைகள் இரண்டும்தான் என்னுடைய ஆட்சியின் நோக்கங்கள் என்று, 2014 ஆண்டு முதன்முதலாக பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்போது சொன்னார்.

ஆனால், அப்பொழுது நல்ல ஆட்சி நடந்து இருக்கிறதா? வளர்ச்சி பெற்று இருக்கிறதா? மணிப்பூர் கலவரம் இதுவரை அடக்கப்பட்டு உள்ளதா? மணிப்பூரில் அந்த இரண்டு பூர்வகுடி மக்கள், இரண்டு மலைவாழ் மக்களிடையேயான சண்டையைத் தீர்த்து வைத்து இருக்கிறதா? இன்று கூட செய்தித்தாள் பார்த்து இருப்பீர்கள், அங்கே மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடைய அலுவலகமே தாக்கப்பட்டு உள்ளது. குண்டுகள் வெடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. அதற்கு முடிவு கண்டு நல்லாட்சியா என நீங்கள் மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.

வளர்ச்சி வளர்ச்சி என்று சொன்னீர்களே, என்ன வளர்ச்சி? இந்தியாவினுடைய வளர்ச்சியைவிட, உற்பத்தியில் தமிழ்நாட்டு வளர்ச்சி கூடி இருக்கிறது. உங்களுடைய வளர்ச்சியை விட, ஒரு மாநிலத்தினுடைய ஆண்டு உற்பத்தி வளர்ச்சி என்பது அதிகமாக இருக்கிறது. மோடியின் ஆட்சி பத்தாண்டு காலத்தில் தோல்வியை மாறி மாறி சந்தித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன சொன்னார், 2019ஆம் ஆண்டு மதவெறியைக் கிளப்பினார். பாகிஸ்தானை விரோதித்து, அது தொடர்பான மத சர்ச்சைகளை உருவாக்கி இரண்டாவது முறை வெற்றி பெற்றார்.

இன்றைக்கு மூன்றாவது கட்டமாக என்ன செய்து கொண்டிருக்கிறார், சமீபத்தில் ராமர் சிலையை அயோத்தியில் பிரதிஷ்டை செய்தார். அது உங்களுடைய கொள்கை, உங்களுடைய நம்பிக்கை என்றால், நாங்கள் அதில் தலையிடத் தயாராக இல்லை. ஆனால், பிரதம அமைச்சர் அதற்காக கன்னியாகுமரியிலிருந்து இந்தியா முழுமையில் உள்ள புண்ணியத் தலங்களுக்குச் சென்று, அவரே அந்த அயோத்தி ராமர் கோயிலுக்கு ஓர் கடுமையான, பரவலான இந்திய துணைக் கண்டம் முழுவதும் சுற்றிம் ஒரு மிகப்பெரிய விளம்பரத்தை உருவாக்கினார்.

ராமேஸ்வரம் வந்தார், புனித நீராடினார். ஸ்ரீரங்கத்திற்குச் சென்றார், ராமாயணத்தைப் பாராயணம் படிக்கச் சொல்லி, அதை அமைதியாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். இது எல்லாம் எதற்காக செய்தார்? ராமாயணத்தில் உள்ள அக்கறையின் காரணமாகவா அல்லது ராமேஸ்வரத்தில் சென்று புனித நீராடினாரே ஆன்மீகத்தில் உள்ள நம்பிக்கை காரணமாகவா? ஆனால் முதலில் உங்களுக்கு அப்படி தோன்றலாம். ஆனால், அதனை அடுத்து நாடாளுமன்றத்தைக் கூட்டினார்.

ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. 17வது நாடாளுமன்றம். அந்த நாடாளுமன்றத்தில் நாட்டின் பிரச்னை பற்றி எதுவும் பேசினாரா? நாட்டின் பிரச்னைகள் பற்றி பேசவில்லை. ஒரு பொதுக்கூட்டத்திலே பாஜகவின் சிறப்பு பேச்சாளர் எப்படி பேசுவாரோ, அது போன்றுதான் பேசினார்.

வர இருக்கின்ற தேர்தலில் 466 தொகுதியில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னார். நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டிய கருத்தா? நாடாளுமன்றம் என்பது மக்களுடைய பிரதிநிதித்துவ சபை. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சபை.

அயோத்தியில் குழந்தை ராமர் சிலையைத் திறந்து வைத்தார். குழந்தை ராமர் சிலையைத் திறந்து வைக்கும் பொழுது யார் யார் இருந்தார்கள்? அவர் இருந்தார், அதேபோன்று புரோகிதர் இருந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் உடைய முதலமைச்சர் இருந்தார், வேறு யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை.

இந்திய நாட்டினுடைய குடியரசுத் தலைவரை அனுமதித்தார்களா? ஒரு நாட்டினுடைய அடையாளமாக கருதப்படுகின்ற குடியரசுத் தலைவரை உள்ளே அனுமதித்தார்களா? அதற்கு என்ன காரணம்? ஆகம விதி பின்பற்றபட்டதா? கும்பாபிஷேகம் ஆன்மீகமாக நடத்தப்படவில்லை. மாறாக ஆன்மிகத்தின் பெயரால் அரசியல் லாபம் ஈட்டுவதற்காக நடத்தப்பட்ட அரசியல் ஆன்மீக விழா.

146 நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு, அவர்கள் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுகிறார்கள். இப்படி ஒரு வரலாறு உண்டா? 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியே அனுப்பப்படுகிறார்கள். சஸ்பெண்ட் செய்துவிட்டு, சட்ட மசோதாக்களை வடிவமைத்து வாய் மூலமாக நிறைவேற்றுகிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் எப்படி சாத்தியப்படும்? அனைத்து சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றால், எப்படி சாத்தியப்படும்? ஒரு மாநிலத்தில் சட்டமன்றம் கலைக்கப்படலாம், ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி இல்லாத காரணத்தினால் வீழ்ந்து விடலாம். நாடாளுமன்றத்தில் கூட பெரும்பான்மை இல்லாமல் போகக்கூடிய கட்டம் உருவாகலாம். அப்படி ஒரு கட்டத்தை மோடி கட்சியே உருவாக்கலாம். ஏன் உருவாக்கவில்லையா? மராட்டியத்தில் என்ன செய்தீர்கள்?

பல்வேறு மாநிலங்களில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எதிர்கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்ற ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகின்ற காரியத்தில் நீங்கள் இறங்கியது இல்லையா? இதுதான் மோடியின் ஜனநாயகமா? இவர்களுடைய ஆட்சி திட்டங்களை மதவெறி அமைப்புதான் வகுத்துக் கொடுக்கின்றன.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான், இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கான வாய்ப்புண்டு. மோடியின் நாசக்கார எண்ணங்களும், சிந்தனைகளும் வெற்றி பெறுமேயானால், ஒரு நாடாக இருப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போகும் என்பதுதான் வரலாற்று ஆசிரியர்களின் கருத்து” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்; "நாடு விரைவில் பாஜகவை தூக்கி எறியும்" - கனிமொழி எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.