ETV Bharat / state

"மோடி போட்டியிடும் தொகுதியில் விவசாயிகள் நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்வோம்" - அய்யாக்கண்ணு எச்சரிக்கை..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 4:27 PM IST

Updated : Feb 13, 2024, 8:59 PM IST

Farmers protest in Trichy
திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

Farmers protest in Trichy: மத்திய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கவில்லை என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் 111 விவசாயிகள் நிர்வாணமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

திருச்சி: விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையைத் தருவதாகக் கூறிய மத்திய அரசு இதுவரை தரவில்லை, ஒரு டன் கரும்பு 2700க்கு விற்பனையானது 8,100 ரூபாய் தருவதாகக் கூறி 3000 ரூபாய் கொடுக்கின்றனர். விவசாய நலனுக்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை.

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு மத்திய அரசு விவசாயிகளைப் போராட்டம் நடத்த விடாமல் அவர்களின் வாகனங்களைத் தடுக்க முள் வேலிகளையும், தடுப்புச் சுவர்களையும் மற்றும் இரும்பு தடுப்புகளையும் வைத்துத் தொடர்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றனர்.

ஆகவே, மேற்கூறிய செயல்பாடுகள் மூலம் மத்திய அரசு, விவசாயிகள் மீது விரோத போக்கைக் கண்டிக்கிறோம் என கூறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே மண்டை ஓடுகளுடன் அரை நிர்வாணமாகப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு விவசாயிகள் மட்டும் அருகில் இருந்த டெலிபோன் டவர் மீது ஏறி விவசாயிகள் சங்கம் கொடியினை ஏந்தியபடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, அரை நிர்வாணத்துடன் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சாலையில் அமர்ந்தும் படுத்தவாரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அங்குப் பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அனைத்து போராட்டங்களையும் விவசாயிகள் கைவிட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாகத் திருச்சி தலைமை தபால் நிலையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினார். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, "மத்திய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கவில்லை என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் 111 விவசாயிகள் நிர்வாணமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று விவசாயிகள் சார்பில் எச்சரிகை விடுத்தார்.

இதையும் படிங்க: திருடிய பதக்கத்தை திருப்பிக் கொடுத்த திருடன்.. இயக்குநர் மணிகண்டன் வீட்டு கொள்ளைச் சம்பவத்தில் திருப்பம்!

Last Updated :Feb 13, 2024, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.