ETV Bharat / entertainment

நடிகர் அருள்மணி மாரடைப்பால் காலமானார் - Actor Arulmani passed away

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 8:41 AM IST

Actor Arulmani passed away due to a heart attack
நடிகர் அருள்மணி மாரடைப்பால் காலமானார்

Actor Arulmani passed away: அழகி, தென்றல் உள்ளிட்ட பல திரைப்பட்ங்களில் நடித்த நடிகரும், அதிமுக நட்சத்திர பேச்சாருமான நடிகர் அருள்மணி மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.

சென்னை: நடிகரும், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பு காரணமாக நேற்றிரவு (வியாழன்கிழமை) சென்னையில் காலமானார். தற்போது அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அருள்மணி தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர் எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தங்கர் பச்சானின் 'அழகி' திரைப்படம் அருள்மணியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். இதுவரை அருள்மணி, அழகி, தென்றல், பொன்னுமணி, தர்மசீலன், கருப்பு ரோஜா, வேல், மருதமலை, கற்றது தமிழ், வன யுத்தம், சிங்கம் 2, தாண்டவகோனே, லிங்கா உள்ளிட்ட 90 படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். மேலும், வேல் திரைப்படத்தில் கலாபவன் மணிக்கு அடுத்த படியாக, வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர். தற்போது 65 வயதாகும் இவருக்குத் திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். நடிப்பு மட்டுமின்றி அரசியலில் கொண்ட ஈடுபாடு காரணமாக, அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் இருந்தார். மேலும், நடிப்பு மற்றும் இயக்குநர் பயிற்சி பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 10 நாட்களாக அதிமுகவுக்கு ஆதரவாக வெளியூர்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வந்தார். அதையடுத்து நேற்று பிரச்சாரம் முடிந்து சென்னைக்குத் திரும்பி வந்த அருள்மணி, சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு அருள்மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, உடனடியாக சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அருள்மணியின் மறைவு அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எப பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தற்போது சமீப காலமாகவே திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய முதியவரை உயிருடன் மீட்ட ரயில் பைலட்.. திருப்பூரில் நடந்தது என்ன? - Old Man Trapped Under Moving Train

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.