ETV Bharat / bharat

3ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: 64.58% வாக்குகள் பதிவு - இந்திய தேர்தல் ஆணையம்! - Lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 1:48 PM IST

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

நாடு முழுவதும் நேற்று மூன்றாவது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், 64.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற 2 ஆம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, 3ஆம் கட்டமாக நேற்று (மே.7) 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 93 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாமில் 4 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், டாமன்-டையூவில் 2 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகள், குஜராத்தில் 25 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, மத்திய உள்துறை அமைச்சரும் காந்தி நகர் தொகுதி வேட்பாளருமான அமித் ஷா, தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது மனைவி பிரீத்தி ஆகியோரும் அகமதாபாத்தில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலின் மகன் அனுஜ் படேல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, அவரது மனைவி ரிவாபா எம்எல்ஏ ஆகியோர் ஜாம்நகர் பகுதியில் வாக்கு செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மனைவி ராதாபாய் ஆகியோர் கர்நாடகாவின் கல்புர்கியில் வாக்களித்தனர்.

அதேபோல், உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில் உள்ள சைபை கிராமத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் ஆகியோர் வாக்கு அளித்தனர். உத்தர பிரதேசத்தின் சம்பல் தொகுதிக்குட்பட்ட குண்டர்கி, பிலாரி, சந்தவ்சி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். அதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 4 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. நாடு முழுவதும் 93 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 64.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

அசாமில் அதிகபட்சமாக 81.61 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 61.44 சதவீத வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம்:-

அசாம் - 81.61%

பீகார் - 58.18%

சத்தீஷ்கார் - 71.06%

தாதர் ஹவேலி டாமன் டையூ - 69.87%

கோவா - 75.20%

குஜராத் - 58.98%

கர்நாடகா - 70.41%

மத்திய பிரதேசம் - 66.05%

மகாராஷ்டிரா - 61.44%

உத்தர பிரதேசம் - 57.34%

மேற்கு வங்கம் - 75.79%

இதையும் படிங்க: 3வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு வாக்குப்பதிவு? முழு விபரம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.