ETV Bharat / bharat

3வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு வாக்குப்பதிவு? முழு விபரம்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 7:52 PM IST

3வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் 60.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Representative image (ANI)

டெல்லி: 3 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (மே.7) இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான நிலையில், வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. கர்நாடகா, குஜராத், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களிலில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று சுமூகமாக நடைபெற்றது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 60.19% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநில வாரியாக விபரங்களின் அடிப்படையில், அசாமில் 74.86%, பீகாரில் 56.01%, சத்தீஸ்கரில் 66.87% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதைத் தொடர்ந்து கோவாவில் 72.52%, குஜராத்தில் 55.22%, கர்நாடகாவில் 66.05%, மத்திய பிரதேசத்தில் 62.28%, மகாராஷ்டிராவில் 53.40%, உத்தர பிரதேசத்தில் 55.13%, மேற்கு வங்கத்தில் 73.93% வாக்குகள் மாலை 5 மணி நிலவரப்படி பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக இன்று நடைபெற்ற தேர்தலில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, டிம்பில் யாதவ், சிவராஜ் சிங் சவுகான், உள்ளிட்ட 1,352 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனிடையே, வாக்களிப்பதற்காக வருகை தந்த பிரதமர் மோடியை குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத் கிழக்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பிரமதர் மோடி தமது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு 2வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலின் 4 ஆம் கட்டம் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மேற்கு வங்க ஆசிரியர்கள் நியமன ஊழல் விவகாரம்: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை - உச்ச நீதிமன்றம்! - West Bengal Teacher Job Scam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.