ETV Bharat / bharat

பட்ஜெட்டை அலங்கரிக்கும் நிர்மலா சீதாராமனின் சேலைகள்.. பிரதிபலிப்பும் பின்னணியும் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 3:19 PM IST

Etv Bharat
Etv Bharat

Interim Budget 2024: 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ஆறாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு, தங்க நிற தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பட்ஜெட் டேப்லெட்டுடன் நீலம் மற்றும் க்ரீம் நிறம் கலந்த டஸ்ஸார் புடவையில் வருகை புரிந்தார்.

இந்த நீல நிறப் புடவை முழுவதிலும் கிரீம் நிற 'காந்தா தையல்' வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் திரிபுராவில் காந்தா புடவைகள் பாரம்பரியமாக காணப்படுகிறது. அப்பகுதிப் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக, அவர்களின் பாரம்பரிய உடையான காந்தா தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சேலையில் இன்று நிர்மலா சீதாராமன் வந்தார்.

நிர்மலா சீதாராமன், 2019ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அவர், இந்திய பாரம்பரிய கைத்தறி நெசவுகளை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் நாட்களில், இந்திய கைத்தறி நெசவாளிகளால் நெய்யப்பட்ட பாரம்பரிய ஆடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஐந்தாவது பட்ஜெட் தாக்கலில், காதல், அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலைக் குறிக்கும் வகையில், கருப்பு மற்றும் தங்க நிற பார்டர் கொண்ட வெர்மில்லியன் (vermillion) சிவப்பு பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.

யூனியன் பட்ஜெட் 2023
யூனியன் பட்ஜெட் 2023

கர்நாடகாவின் இல்கல் பகுதியில், நவலகுண்டா எம்பிராய்டரி கொண்டு கையால் நெய்யப்பட்ட 'இல்கல்' சேலையை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

யூனியன் பட்ஜெட் 2022
யூனியன் பட்ஜெட் 2022

மத்திய பட்ஜெட் 2022: நிர்மலா சீதாராமன் தனது நான்காவது பட்ஜெட் தாக்கலில் நெகிழ்ச்சி, நம்பகத்தன்மை, பாதுகாப்பை குறிக்கும் வகையில், மிக எளிமையான மற்றும் மிருதுவான பழுப்பு நிற போம்காய் புடவை அணிந்திருந்தார். இது ஒடிசாவின், கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த போம்காய் கிராமத்தின் கைத்தறி புடவையாகும்.

யூனியன் பட்ஜெட் 2021
யூனியன் பட்ஜெட் 2021

மத்திய பட்ஜெட் 2021: தனது மூன்றாவது பட்ஜெட் தாக்கலின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானாவின் பட்டு நகரத்தின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விதமாக, வெள்ளை நிற டிசைன் மற்றும் தங்க பார்டர் கொண்ட மிருதுவான மற்றும் எளிமையான சிவப்பு மற்றும் வெள்ளை நிற போச்சம்பள்ளி பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.

யூனியன் பட்ஜெட் 2020
யூனியன் பட்ஜெட் 2020

மத்திய பட்ஜெட் 2020: 2020-2021 மத்திய பட்ஜெட் தாக்கலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மஞ்சள் நிற பட்டுப் புடவையில், தங்கச்செயின், வளையல்கள் மற்றும் சிறிய காதணிகளுடன் வருகை புரிந்தார்.

யூனியன் பட்ஜெட் 2019
யூனியன் பட்ஜெட் 2019

மத்திய பட்ஜெட் 2019: 2019ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட் தாக்கலில், நிதி அமைச்சர் இளஞ்சிவப்பு நிற மங்களகிரி புடவையில், தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பட்ஜெட் டேப்லெட்டுடன் வந்தார். இந்த வகை புடவைகள், ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரியில் நெசவு செய்யப்படுகிறது.

முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (ஜன. 31) தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்றும், தேர்தலுக்குப் பிறகு முழு பட்ஜெட்டுக்காக மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருவோம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: Interim Budget 2024: கர்பப்பை புற்றுநோயை தடுக்க சிறுமிகளுக்கு தடுப்பூசி - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.