தமிழ்நாடு

tamil nadu

வீட்டு இணைப்பு மின் கட்டணம் உயர்த்தப்படாது - முதலமைச்சர் திட்டவட்டம்

By

Published : Jun 10, 2023, 6:36 AM IST

வீட்டு மின் இணைப்பு கட்டணம் எக்காரணம் கொண்டும் உயர்த்தப்பட மாட்டாது என்றும், இலவச மின்சார சலுகைகள் தொடரும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

வீட்டு இணைப்பு மின் கட்டணம் எக்காரணத்தை கொண்டும் உயர்த்தப்படாது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
வீட்டு இணைப்பு மின் கட்டணம் எக்காரணத்தை கொண்டும் உயர்த்தப்படாது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

வீட்டு இணைப்பு மின் கட்டணம் எக்காரணத்தை கொண்டும் உயர்த்தப்படாது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

திருச்சி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பாசனப் பகுதிகளையும், துார்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”ஜூன் 12ஆம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளேன். பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் வரும் முன்பாகவே அனைத்து இடங்களிலும் துார்வாரும் பணிகள் முடிக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல், இந்த ஆண்டும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்பார்கள் என்று நம்புகிறேன். திமுக ஆட்சியில் வேளாண் உற்பத்தியும், பாசன பரப்பும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் வேளாண் துறையின் மாபெரும் புரட்சியை காட்டுகிறது. துார்வாரும் பணியை சிறப்பாகச் செய்து மண்ணையும், மக்களையும் காப்போம்.

கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களும் இதையே திருப்பி மேகதாது அணை கட்டுவதாக சொன்னபோதும், நாம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தோம். அதே நிலைப்பாட்டில்தான் திமுக அரசு உள்ளது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இருந்த உறுதியைப் போல், இந்த அரசும் உறுதியாக இருக்கும்.

பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று செயல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் குறைகள் இருந்தால், முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டாவில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால் துார்வாரும் பணி, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நடைபெற்று வருகிறது.

திருச்சி மற்றும் மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழக்கப்பட்ட வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மறு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் நினைப்பது எல்லாம் நடந்தால், கவர்னரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைப்பீர்களா என்ற பிரச்னையே இல்லை. சென்னை பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் வைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

தற்போது, இருக்கும் பல்கலைக்கழகத்துக்கு வைக்கலாமா அல்லது புதிய பல்கலைக்கழகத்துக்கு வைக்கலாமா என்று பரிசீலித்து வருகிறோம். தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாததற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியதுபோல் கவர்னர்தான் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்பதை அழுத்தமாக சொல்வேன்.

இது போன்ற இடையூறுகளை தவிர்ப்பதற்காக, முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். ஏற்கனவே ஆண்டுக்கு 500 டாஸ்மாக் கடைகள் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார். தொடர்ந்து, தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு, மத்திய அரசில்தான் அமைச்சரவை மாற்றம் வரும் என்று தகவல் வந்து கொண்டிருக்கிறது என கூறினார்.

மேலும் பேசிய அவர், “மின் கட்டண உயர்வு பற்றி, ஒரு தனியார் பத்திரிகை மட்டுமே பெரிதுபடுத்தி உள்ளனர். மற்ற ஊடகங்கள் அந்த விவகாரத்தை என்னவென்று புரிந்து கொண்டுள்ளனர். வீட்டு மின் இணைப்பு கட்டணம் எக்காரணம் கொண்டும் உயர்த்தப்பட மாட்டாது. இலவச மின்சார சலுகைகள் தொடரும்.

மத்திய அரசின் விதிமுறைப்படி 4.7 சதவீத கட்டணம் அதிகரிக்க வேண்டும். ஆனால், 2.18 சதவீதமாக குறைத்து, அந்த தொகையையும் மானியமாக ஏறு்று தமிழ்நாடு அரசே, மின் வாரியத்துக்கு செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் 13 பைசாவில் இருந்து 21 பைசா வரை உயர்வு இருக்கும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

மற்ற மாநிலங்களில் இந்த மின் கட்டணம் அதிகம். அதிமுக ஆட்சியில் செங்குத்தாக மின் கட்டணத்தை உயர்த்தி, மின் வாரியத்தை கடனில் மூழ்கடித்து விட்டுச் சென்றனர். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, உதய் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால்தான் இந்த கோளாறு எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆவின் பிரச்னைகள் இருப்பதாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆவின் குறித்து போலியாக ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக, வரும் 23ஆம் தேதியில் பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் அனுமதி பெறப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு.. தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details