ETV Bharat / state

18 மாவட்ட கல்வி அதிகாரி பணியிட விவகாரம்; திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்க டிஎன்பிஎஸ்சி-க்கு அனுமதி! - 18 DEO posts issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 10:26 PM IST

DEO: தமிழகத்தில் 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான திருத்திய தேர்வுப் பட்டியலை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், இறுதி முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

Madras HC
சென்னை உயர் நீதிமன்றம் கோப்பு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த 18 பணியிடங்களில், நான்கு பணியிடங்கள் ஏற்கனவே ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. நான்கு ஆசிரியர்களும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டனர்.

இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த நிர்மல்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே இடஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் இடஒதுக்கீட்டின் பலனை வழங்கியதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற விண்ணப்பதாரர்களின் நியமன வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், ஆசிரியர் மற்றும் பொதுப் பிரிவினருக்கு என தனித்தனியாக தேர்வுப் பட்டியலை மாற்றியமைத்து, நான்கு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தற்போது பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணயை ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதேநேரம், திருத்திய தேர்வுப் பட்டியலை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுமதியளித்த நீதிபதிகள், இறுதி முடிவுகளை வெளியிடக்கூடாது எனவும், வழக்கு முடியும் வரை தற்போது பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி; தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - Exhibitions At Education Campus

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.