ETV Bharat / state

மூன்று ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை இது தான்.. ராமதாஸ் விமர்சனம்! - PMK Ramadoss alleges mk stalin

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 10:35 PM IST

PMK Ramadoss: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தவிர, எவ்வித சாதனையும் செய்யவில்லை என்றும், மீதமுள்ள ஆண்டுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்,  முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம்
பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் (credita -ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியாதாவது, "தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தக்கூடாது. ஒருவர் பெயரில் தனித்தனி மின் இணைப்புகள் இருந்தால், அதனை ஒன்றாக்கும் முயற்சியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ள நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இது அனைத்து மக்களையும் கடுமையாக பாதிக்கும். மின் இணைப்புடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்கும்போதே இந்த அச்சம் ஏற்பட்டது. பல மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். ஆண்டுதோறும் ஜூலையில் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். கடந்த ஆண்டு பாமக கடுமையாக எதிர்த்ததால் வீடுகளை தவிர்த்து, வணிக நிறுவனங்களுக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

ரூ.31 ஆயிரத்து 500 கோடிக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இவ்வளவு உயர்த்தியும் மின்வாரிய நஷ்டம் குறையவில்லை. மின் வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத்தான் தடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல். 510 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவிக்கவேண்டும்.

பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம்: பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தின் மூலம் மக்களுக்கு தேவையான அடிப்படை சான்றுகளைப் பெற ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளது. கையூட்டு கொடுத்தால் சேவை கிடைப்பது அவமானமாகும். பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால் சேவைக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். இச்சட்டம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இச்சட்டம் நிறைவேற்றவேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை என்ன?

தமிழக முதல்வர்கள் ஒவ்வொருவரும் சாதனை படைத்து வரலாற்றில் இடம் பிடித்தார். ராஜாஜி சென்னை மாகாணத்தில் மது விலக்கை அறிமுகம் செய்தார் . அதனை ஓமந்தூரார் சென்னை மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தினார். காமராஜர் பாசன திட்டங்களையும், அண்ணா மும்மொழி திட்டத்தை ரத்து செய்து, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றினார்.

கருணாநிதி 3 வகையான இட ஒதுக்கீட்டையும், எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தையும், ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தையும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை 9வது அட்டவணையில் கொண்டுவந்தார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை. மீதமுள்ள ஆண்டுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்கவேண்டும்.

போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறினாலும் நடைமுறைபடுத்தவில்லை. பாமகவிற்கு தமிழ்நாடு குறித்த பெருங்கனவு உள்ளது. எங்களுக்கு 6 மாதங்கள் ஆட்சியை கொடுத்தால் நாங்கள் நிறைவேற்றுவோம் அல்லது நேர்மையான 10 அதிகாரிகளை ஒப்படைத்தால்கூட இதனை சாத்தியமாக்கி காட்டுவோம்.

பாசனதிட்டங்களை நிறைவேற்றாத திமுக, அதிமுக: காமராஜர் காலத்தில் அணைகள் கட்டப்பட்டது. 57 ஆண்டுகளில் இக்கட்சிகளின் ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை. திமுக ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவைகள் அணைகள் என சொல்ல முடியாது. இந்த அணைகள் ஒரு டிஎம்சி கொள்ளளவுகூட இல்லை.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.700 ஊக்கத்தொகை கொடுக்கவேண்டும். தெலங்கானாவில் சன்ன ரக நெல்லுக்கு ரூ.500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. 2024-2025 ஆண்டில் 40 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டால் ரூ.2500 கோடி செலவாகும்.

முல்லை பெரியாறு புதிய அணை: முல்லை பெரியாறு புதிய அணைக்கு அனுமதி தரக்கூடாது. வரும் 28aஅம் தேதி சுற்றுசூழல் குழு விவாதிக்க உள்ளது கண்டிக்கதக்கது. உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் கேரள அரசின் அணைகட்டும் முயற்சியை கைவிட மத்திய அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும்.

விழுப்புரம் பேருந்து நிலையம் : விழுப்புரம் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மிதக்க காரணம் அது பூந்தோட்டம் ஏரியில் கட்டப்பட்டது. இது போலவே திண்டிவனம் பேருந்து நிலையம் ஏரியில் கட்டப்படுவதை கைவிட வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஜிப்மர் மருத்துவமனை விடுமுறை அளிக்க கூடாது. ஜிப்மர் மருத்துவமனையில் எந்நாளும் புறநோயாளிகள் பிரிவு செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் கொலை கொள்ளைகள் அதிகம் நடைபெறுவதை தடுக்க காவல்துறை விழிப்புடன் இருக்கவேண்டும். இதற்கான திட்டங்களை காவல்துறை அதிகாரிகள் கேட்டால் நாங்கள் கூறுவதற்கு தயாராக உள்ளோம். முல்லை பெரியாறு அணை குறித்து தேர்தல் முடிவுக்கு பின் பிரதமரை சந்தித்து வலியிறுத்துவேன்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை; கேரள முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! - Silandhi River Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.