தமிழ்நாடு

tamil nadu

“திமுக, காங்கிரஸ் டெபாசிட் கூட வாங்க முடியாமல் செய்வோம்” - கரூர் நாடாளுமன்ற அமைப்பாளர் செந்தில்நாதன் பேச்சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 3:22 PM IST

BJP Meeting: சாபக்கேடான சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மணப்பாறைக்கு அமைந்திருக்கிறார்கள் என கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அமைப்பாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
கரூர் நாடாளுமன்ற அமைப்பாளர் செந்தில்நாதன் பேச்சு

கரூர் நாடாளுமன்ற அமைப்பாளர் செந்தில்நாதன் பேச்சு

திருச்சி:2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான, பாஜக நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள் ஆலோசனை கூட்டம், மணப்பாறை - மதுரை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (டிச.27) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், பாஜகவில் இணைந்த நிர்வாகிகள் முப்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அமைப்பாளர் செந்தில்நாதன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக, பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாஜக மக்களுக்கு எவ்வாறு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறது, மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதேபோன்று, பூத் கமிட்டி அமைக்கின்ற பணியும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் மக்களை நேரடியாக சந்திக்கின்ற வகையில், வீடு தோறும் பாஜக ஒவ்வொரு நபரையும் நேரடியாக சந்திக்க இருக்கின்றது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக, மக்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சியாக இன்றைய தினம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நூறு நாட்களுக்குள் தமிழக அரசையும், நாடாளுமன்ற உறுப்பினரையும் வீட்டுக்கு அனுப்புவோம். திராவிட முன்னேற்ற கழகமாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் டெபாசிட் வாங்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது. கண்டிப்பாக அதை நடைமுறைப்படுத்தி காட்டுவோம்.

மேலும், மணப்பாறையில் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட மக்களுக்கு தேவைப்படுகின்ற கோரிக்கைகளை பாஜகவால் மட்டும் தான் செய்ய முடியும். இருபது நாட்களுக்கு ஒரு முறை தான் மணப்பாறை தொகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கிறது. இங்குள்ள சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும் குடிநீர் பிரச்சனை பற்றி இதுவரை ஏதும் பேசவில்லை. இந்த மாதிரி ஒரு சாபக்கேடான சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த மணப்பாறைக்கு அமைந்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி அவர்கள் திருச்சி மாவட்ட மக்களுக்கு விமான நிலையத்தை அர்ப்பணிப்பதற்காக ஜனவரி 2ஆம் தேதி வருகிறார்கள். அவருக்கு பாஜக சார்பில், மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுக்க இருக்கிறார்கள். இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றி மொழி அரசியலும், இன அரசியலும் செய்து தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இனிமேல் இது நடக்காது. தமிழக மக்கள் எல்லாம் பாஜகவை விரும்புகிறார்கள். எனவே, தாமரைக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:மறைந்தார் மக்களின் நாயகன் விஜயகாந்த்.. கடந்து வந்த பாதை..!

ABOUT THE AUTHOR

...view details