தமிழ்நாடு

tamil nadu

தென்னை மரங்களில் சிவப்பு கூன்வண்டு தாக்குதலை தடுக்க சூப்பர் வழி - வேளாண்மை இணை இயக்குநர் விளக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 11:45 AM IST

தென்னை மரங்களில் சிவப்பு கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Coconut trees
தென்னை மரங்கள்

புதுக்கோட்டை: தென்னை மரங்களில் சிவப்பு கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களில் பரவலாக சிவப்பு கூன்வண்டு தாக்குதல் காணப்படுகிறது.

சிவப்பு கூன்வண்டின் புழுக்கள் மரத்தின் தண்டு பகுதிகளை உள்ளிருந்து துளைத்து மென்று தின்று சக்கைகளாக வெளியேற்றுவதால் குருத்துப் பகுதி பாதிக்கப்பட்டு மரம் ஒடிந்து விழுந்து சேதம் விளைவிக்கும். இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சிவப்பு கூன் வண்டுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.

மரத்தின் காயங்களில் கூன்வண்டுகள் முட்டையிடுவதால் மரங்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்கிய இடத்திலும் கூன்வண்டுகள் முட்டையிடுவதால் காண்டாமிருக வண்டுகள் தாக்குதலை முறையாக கட்டுப்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க:5ஆம் ஜார்ஜ் நினைவு விளக்குத்தூண் நெல்லையில் கண்டுபிடிப்பு!

பச்சை மட்டைகளை வெட்டுவதை தவிர்க்கவும். அவசியம் ஏற்பட்டால் தண்டு பகுதியில் இருந்து 3 அடி தள்ளி வெட்டவும். இடி தாக்கிய மரங்கள் மற்றும் கூன்வண்டு தாக்கிய மரங்கள் ஆகியவை கூன்வண்டுகளின் வாழ்விடம் என்பதால் அந்த மரங்களை வெட்டி தீயிட்டு எரிக்கவும். கரும்புச்சாறு 2 லிட்டர், ஈஸ்ட் மாத்திரை 5 கிராம், 5 மில்லி அசிட்டிக் அமிலம், நீள வாக்கில் வெட்டப்பட்ட தென்னை இலை மட்டை துண்டு போடப்பட்ட பானைகளை ஏக்கருக்கு 30 வீதம் வைத்து வண்டுகளை அளிக்க வேண்டும்.

பெர்ரோலியூர் கவர்ச்சி பொறிகளை ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து சிவப்பு கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கவும், கவர்ச்சி பொறியில் கவரப்படும் வண்டுகளை அவ்வப்போது கண்காணித்து அழிக்க வேண்டும். கவர்ச்சி பொறிகளை தென்னை மரத்திலோ அல்லது ஓலைகளிலோ கட்டி வைத்தலை தவிர்க்கவும்.

கவர்ச்சிப் பொறியில் உள்ள மூலப்பொருள் படிப்படியாக குறைந்து வரும் என்பதால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பொறிகளில் உள்ள மருந்தை மாற்ற வேண்டும். அதிகப்படியாக சேதமான இடங்களில் மரம் முற்றிலும் பாதிப்படைந்தால் மட்டும் வேரின் மூலம் மருந்து செலுத்தி கட்டுப்படுத்தலாம்.

7 செ.மீ க்கு 10 செ.மீ அளவுள்ள பாலிதீன் பையில் 10 மில்லி மோனோ குரோட்டோபாஸ் 36 டபுள்யு எஸ்சி என்ற மருந்துடன் 10 மில்லி நீரினை கலந்து சேர்த்த இக்கலவையில் புதிய வேரினைத் சாய்வாக கூர்மையாக வெட்டி வேரில் படுமாறு இறுக கட்ட வேண்டும். மருந்து செலுத்தப்பட்ட மரங்களில் இருந்து 45 நாட்களுக்கு பின்னரே காய்களை அறுவடை செய்ய வேண்டும்.

கூன்வண்டு தாக்குதலுக்கு உள்ளான மரங்களை தோப்புகளிலேயே வெட்டி வைப்பது, காண்டாமிருகம் வண்டுகளின் இனப்பெருக்கத்துக்கு வழி வகுக்கும். பாதிக்கப்பட்ட மரங்களை தோப்பில் இருந்து நீக்குவதே இந்த வண்டுகளின் தாக்குதலை குறைக்கும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:MK Stalin on Twitter Speaking For india : "தெற்கில் இருந்து ஒலிக்கும் குரலுக்காக காத்திருங்கள்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details