தமிழ்நாடு

tamil nadu

மாணவர்களை போல பள்ளி சீருடையில் வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

By

Published : Aug 9, 2022, 7:24 AM IST

மாணவர்களை போல பள்ளி சீருடையில் வரும் அரசு பள்ளி ஆசிரியர்!

பெரம்பலூரில் மாணவர்களை போல, பள்ளி சீருடையில் அரசுப்பள்ளி ஆசிரியர் வருகை தந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான இணக்கமான சூழலை பலப்படுத்தி வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் T.களத்தூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர், புகழேந்தி. இவர் 2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளார்.

வாட்ஸ் ஆப் குழு மூலமாக பள்ளி முன்னாள் - இந்நாள் மாணவர்களை ஒன்றிணைத்து, நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். மேலும் 2018 ஆம் ஆண்டு கற்றல் கற்பித்தல் பணியில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களை மேம்படுத்தி வந்ததால் தமிழ்நாடு அரசின் ‘கனவு ஆசிரியர்’ விருதை பெற்றார்.

மாணவர்களை போல பள்ளி சீருடையில் வரும் அரசு பள்ளி ஆசிரியர்!

இந்த விருது மூலம் பெற்ற ரூ.10,000 தொகையை கொண்டு, மாணவர்களை தஞ்சாவூர், தரங்கம்பாடி, பூம்புகார் என கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர் பணியில் சேர்ந்ததில் இருந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போது ஆங்கில பாடத்தில் 100% சதவீத தேர்ச்சியை அப்பள்ளி மாணவர்கள் பெற்று வருகின்றனர்.

அதேநேரம், கரோனா காலக்கட்டத்தில் மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று கல்வி கற்பித்து கனவு ஆசிரியராக திகழ்ந்து வருகிறார். பொதுத் தேர்வின்போது மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்களின் பெற்றோர்களை சந்தித்து, கல்வி நிலை குறித்து உரையாடி பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கி வருகிறார்.

மாணவர்களுடன் மரம் நடும் பணியில் ஆசிரியர் புகழேந்தி

மேலும் போட்டிகள் நடத்துவது மற்றும் கிராமப்புற மாணவர்களிடம் எளிய முறையில் ஆங்கில மொழியை கற்றுக் கொடுத்தும் வருகிறார், ஆசிரியர் புகழேந்தி. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் "நல்லாசிரியர் " விருதையும் பெற்றார். இதன் மூலம் கிடைத்த தொகையை கொண்டு, பசுமை பள்ளியை உருவாக்கிய மாணவர்களை கேரளாவிற்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றார்.

இவ்வாறான செயல்களை செய்து வரும் ஆசிரியர் புகழேந்தி, மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையேயான இணக்கமான சூழலை உருவாக்கும் பொருட்டு, பள்ளி சீருடையில் மாணவர்களை போல வருகை தந்து ஊக்கப்படுத்தி வருகிறார். இது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:அரசு பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை - மாணவர்கள் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details