தமிழ்நாடு

tamil nadu

மதுரை அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம் கண்டெடுப்பு; சாலைப் பணியால் அழியும் அவல நிலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 8:24 AM IST

Lakshmi Narayana Sculpture: மதுரை சாலையோரம் அழியும் நிலையில் இருந்த கி.பி 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் சிற்பத்தை ஆய்வாளர்கள் கண்டெடுத்து உள்ளனர்.

கள ஆய்வில் கண்டறியப்பட்ட தலையற்ற லட்சுமி நாராயணர் சிற்பம்
கள ஆய்வில் கண்டறியப்பட்ட தலையற்ற லட்சுமி நாராயணர் சிற்பம்

மதுரை:தே. கல்லுப்பட்டி அருகே மோதகம் என்ற சுப்புலாபுரம் பகுதியில் சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. அதில் வரலாற்றுத்துறை கௌவர விரிவுரையாளரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, பாலகிருஷ்ணன், ஆய்வாளர் அனந்தகுமரன் ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சாலை ஓரம் தலைப்பகுதி உடைந்த நிலையில் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

அந்த கற்சிலையானது, கி.பி 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 800 ஆண்டு பழமையான கற்சிலை என தொல்லியல் கள ஆய்வாளர் கணிப்பின்படி கூறப்படுகிறது. இதுகுறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறுகையில், “பாண்டியர் காலத்தில் செங்குடிநாட்டின் எல்லைக்கு உட்பட்ட மோதகம் வேளாண்மை மற்றும் வணிகம் செய்வதில் சிறப்பு பெற்று விளங்கியது.

இவ்வூரில் பல வரலாற்றுத் தடயங்கள் புதைந்த நிலையில், மக்கள் வசிப்பிடம் இல்லாமல் அரசாங்க பதிவேட்டில் மட்டும் ஆவாரம்பட்டி, சுப்புலாபுரம், கரையாம்பட்டி, தாதமடம் போன்ற நான்கு கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெயரில் மோதகம் தற்போது உள்ளது.

இப்பகுதியில் தற்போது திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்குள்ள காவல்துறை சோதனைச்சாவடி அருகே மேற்கு திசையில் சாலை ஓரத்தில் தலைப்பகுதி உடைந்த நிலையில் லட்சுமி நாராயணன் கற்சிலை காணப்படுகிறது.

கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட லட்சுமி நாராயணர் சிற்பம்

லட்சுமி நாராயணன் கற்சிற்பம்:இந்த கற்சிற்பம் குறித்து ஆய்வு செய்தபோது மூன்றடி உயரத்தில் தலைப்பகுதி முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. எஞ்சியவற்றை வைத்து பார்க்கும் போது இக்கற்சிலை லட்சுமி நாராயணர் சிற்பம் என்பது தெரியவந்தது.

சிவன் பார்வதி இணைந்த உருவமானது அர்த்தநாரீஸ்வரர் என அழைக்கப்படுவதைப் போன்று, திருமாலும் லட்சுமியும் இணைந்த உருவமாக அர்த்த லட்சுமி நாராயணர் என்று வட இந்திய மக்களால் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இச்சிற்பங்கள் வட இந்தியாவில் அதிக அளவில் கிடைத்துள்ளன என்றாலும், சமீபகாலமாக லட்சுமி நாராயணர் சிற்பங்கள் தமிழகத்தில், குறிப்பாக தென்தமிழகத்தில் பரவலாக கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கள ஆய்வில் கண்டறியப்பட்ட இச்சிற்பமானது, தலைப்பகுதி இன்றி சுகாசன கோலத்தில் அமர்ந்தபடி செதுக்கப்பட்டு உள்ளது. இதில் நாராயணர் தனது இடது கையால் தனது மனைவி லட்சுமியை அணைத்தபடியே, அன்னை (லட்சுமி) நாராயணரை தனது வலது கையால் இடைப் பகுதியின் ஊடே, இடையின் பின்புறமாக பிடித்தபடியும் சிற்பம் அழகாக செதுக்கப்பட்டு உள்ளது.

இதில் நாராயணரின் இடது தொடையில் லட்சுமி அமர்ந்துள்ளார். நாராயணரின் மார்பில் ஆபரணங்கள் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இடையில் ஆடையானது கெண்டைக்கால் வரை இடம்பெற்றுள்ளது. லட்சுமியின் உருவமானது மேலாடை இன்றியும் அரையாடையுடனும் காணப்படுகிறது.

இச்சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது பிற்கால பாண்டியர்கள் கை வண்ணத்தில் உருவானதாகவும், 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சிற்பத்தை சிதைந்த நிலையில் மக்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:மெர்லின் பாட்டி: 81 வயதில் ஆங்கில டீச்சராக பாடம் எடுக்கும் பாட்டியின் நெகிழ்வான கதை!

ABOUT THE AUTHOR

...view details