தமிழ்நாடு

tamil nadu

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசுகள், பணமாகப் பெறுவதில்லை அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதி..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 6:27 PM IST

Jallikattu case: ஜல்லிக்கட்டு போட்டிகளில் வசூல் செய்யப்படும் நன்கொடைகள் தங்கக் காசு வாங்குவதில் முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் விழா கமிட்டியினர் முறைகேடுகளில் ஈடுபட்டால் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

a case related to jallikattu competitions donations collected
a case related to jallikattu competitions donations collected

மதுரை: மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஊர்களிலும் ஆரம்பிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வருகின்ற 15ஆம் தேதி அவனியாபுரத்தில் துவங்க உள்ளது. ஜல்லிக்கட்டு வீரர்களையும், காளைகளையும் ஊக்குவிக்கும் விதமாக வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் கார், இருசக்கர வாகனம், தங்கக் காசு உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த ஜல்லிக்கட்டு விழா கமிட்டினர் பரிசுப் பொருட்கள் வாங்குவதில் பல்வேறு முறைகேடுகள் செய்து வருகின்றனர். இதே போல் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசு வழங்குவதிலும் முறைகேடுகள் நடைபெறுகிறது. கடந்த வருடம் வெற்றி பெற்றதாகக் கூறி ஒரு வீரருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. அது பின்னர் சர்ச்சையானது.

இதேபோல், தங்கக் காசு வழங்குவதிலும் பல குளறுபடிகள் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காரணம் காட்டி பல கோடிக்குப் பரிசுப் பொருட்கள், தங்கக் காசுகள், நிகழ்ச்சி ஒளிபரப்பு என பல்வேறு வகையில் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உரிய ஆவணங்கள் கிடையாது, உரியக் கணக்குகள் கிடையாது.

இந்த ஜல்லிக்கட்டு விழாவைப் பொருத்தவரை அனைத்துமே அரசு தரப்பில் இருந்து செலவு செய்யப்படுகிறது குறிப்பாக காவல்துறைக்குக் கூட பாதுகாப்பு சம்பளம் என எதுவும் விழாக் குழுவினர் வழங்குவதில்லை. இந்த நிலையில் பல கோடி ரூபாய் வசூல் செய்வதில் உரியக் கணக்குகளை வருவாய்த்துறையினரும் கேட்பதில்லை.

ஜல்லிக்கட்டு விழா கமிட்டினர் இது போன்ற வசூலில் ஈடுபட்டு பரிசு வழங்குவதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது எனவே பரிசுப் பொருள்கள் வசூல் செய்வது, பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வது என அனைத்து நடவடிக்கைகளுக்கான கணக்குகளை வருவாய்த்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மேற்பார்வையில் நேர்மையாக நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் கோரிக்கை ஏற்கனவே உயர் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், விழா கமிட்டியினர் யாரிடமும் எந்த ரொக்கப் பணமும் வசூல் செய்வது கிடையாது. ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றால் உடனடியாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை மூலமாக வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையான விழா கமிட்டினர் வசூல் முறைகேடு என்பது கண்காணிக்கப்பட்ட வருவதாகவும் யாரும் ரொக்கமாக எந்த நன்கொடையும் பெறுவதில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் ஏதேனும் முறைகேடு புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் இதில் புதிதாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என கூறி இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க:“காங்கிரஸின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது” - வானதி சீனிவாசன் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details