ETV Bharat / state

“காங்கிரஸின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது” - வானதி சீனிவாசன் கண்டனம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 4:04 PM IST

Updated : Jan 11, 2024, 4:26 PM IST

Ayodhya Ramar temple: அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காங்கிரஸ் புறக்கணிப்பது 100 கோடி மக்களை அவமதிக்கும் செயல் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன் அறிக்கை
வானதி சீனிவாசன் அறிக்கை

கோயம்புத்தூர்: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருந்தது. இது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் நிகழ்ச்சி எனக்கூறி விழாவை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. இதனை எதிர்த்து, பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • காங்கிரஸின் உண்மை முகம் மீண்டும் ஒரு அம்பலமாகியுள்ளது

    அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பது 100 கோடி மக்களை அவமதிக்கும் செயல்

    காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஜனவரி 10ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில்… pic.twitter.com/XyhMd9VVYw

    — Vanathi Srinivasan (@VanathiBJP) January 11, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், “காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஜனவரி 10ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ள ஸ்ரீராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள்" என்று அறிவித்துள்ளார்.

ஸ்ரீராமர் பிறந்த அயோத்தியில் அவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பது, 100 கோடிக்கும் அதிகமான பாரத நாட்டு மக்களின் பல நூற்றாண்டு கால கனவு. அதனால்தான், காங்கிரஸ் உள்பட அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், முக்கிய பிரமுகர்களுக்கும், 'ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை' அழைப்பிதழ்களை வழங்கியது. அனைவருமே இது தங்களுக்குக் கிடைத்த பாக்கியம் என பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே நாடு முழுவதும் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. பாரதம் முழுவதும் மக்கள் தங்கள் வீட்டு விசேஷம் போலக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டும், 'ஸ்ரீராமர் கோயில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் நிகழ்ச்சி' நிரல் எனக் கூறி கும்பாபிஷேக அழைப்பிதழை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் உண்மையான தலைமைக்கு இருக்கும் இந்து மத வெறுப்பை அனைவரும் அறிவர். அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் புறக்கணித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளது. நாட்டு மக்கள், காங்கிரஸ் கட்சியைப் புரிந்து கொள்ள மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை அக்கட்சியே வழங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால், குஜராத்தில் ஸ்ரீ சோமநாதர் கோயில் கட்டப்பட்டது போல, சுமூகமாக ஸ்ரீராமர் கோயிலை நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே கட்டியிருக்கலாம். ஆனால், சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக, இந்துக்களின் உணர்வுகளைத் துச்சமென மதித்து வந்தது. சட்ட ரீதியாக, யாருடைய எதிர்ப்பும் இல்லாமல், அனைவரின் ஆதரவோடு, அனைத்துத் தரப்பினரும் பெரு மகிழ்ச்சி அடையும் வகையில் அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீராமர் கோயில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் நிகழ்ச்சி நிரல் எனக்கூறும் சோனியா அம்மையார் நினைத்திருந்தால், அதைக் காங்கிரஸின் நிகழ்ச்சி நிரலாக மாற்றியிருக்கலாம். அதற்கான வாய்ப்பிருந்தும், இந்துக்கள் தானே ஏமாற்றி விடலாம் என நினைத்தார்கள். ஆனால், எது நடக்கவே நடக்காது என நினைத்தார்களோ அதைப் பிரதமர் நரேந்திர மோடி சாதித்துக் காட்டியுள்ளார்.

சோனியா அம்மையாருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் விருப்பம் இல்லை என்றால், காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் உள்ள ராம பக்தர்களில் சிலரை அனுப்பி வைத்திருக்கலாம். அதற்குக்கூடச் சோனியா, ராகுலுக்கு மனமில்லை. காங்கிரஸின் உண்மையான தலைமையின் இந்த உணர்வை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.

காங்கிரஸின் உண்மையான தலைமையான சோனியா குடும்பத்தினருக்கு, பாஜகதான் எதிரி என்றால் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருவதில் அல்லது காங்கிரஸில் உள்ள ராம பக்தர்களை அனுப்புவதில் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால், மீண்டும் ஸ்ரீராமர் பேரலை நாடெங்கும் பரவுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதையே, அவர்களின் இந்த புறக்கணிப்பு அறிக்கை காட்டுகிறது.

ஒரு மத நிகழ்வில், பெரும் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால்கூட பரவாயில்லை. பங்கேற்க மாட்டோம். ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை நிராகரிக்கிறோம் என்பது 100 கோடிக்கும் அதிகமாக இந்துக்களை அவமதிக்கும் செயல். ஆணவத்தின் வெளிப்பாடு.

இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக நாட்டு மக்களிடம் காங்கிரஸின் உண்மையான தலைமை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணவம் பிடித்தவர்களுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிவகிரியில் சிக்கிய மூன்று மான் கொம்புகள் - வனத்துறை அதிரடி நடவடிக்கை!

Last Updated :Jan 11, 2024, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.