தமிழ்நாடு

tamil nadu

ஈரோடு அருகே குட்கா பொருட்களை லாரி மூலம் கேரளாவுக்கு கடத்த முயற்சி.. ஆசனூர் போலீசார் அதிரடி நடவடிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 10:37 AM IST

Gutka smugglers arrested: ரூ.12 லட்சம் மதிப்புள்ள 38 மூட்டை குட்கா பொருட்களை லாரி மூலம் கேரளாவிற்கு கடத்த முயன்ற நபர்களை, ஆசனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆசனூர் போலீசார் அதிரடி நடவடிக்கை
குட்கா பொருட்களை லாரி மூலம் கேரளாவுக்கு கடத்த முயற்சி

ஈரோடு:கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு காய்கறி மற்றும் சரக்கு பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்வது வழக்கம். இந்த வாகனங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆசனூர் வழியாக மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், ஆசனூர் போலீசார் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த மினி லாரியைத் தடுத்து நிறுத்திய போலீசார், அதனை சோதனையிட்டனர். அப்போது, வாகனத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த மினி லாரியை பறிமுதல் செய்த ஆசனூர் போலீசார், அதனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: காதலர்களை மிரட்டி ஜிபே மூலம் பணம் பறித்த கும்பல்..! வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம்!

பின்னர் மூட்டைகளை சோதனையிட்டபோது, அதில் 25 மூட்டை கணேஷ் புகையிலை, 13 மூட்டை கூல் லிப் குட்கா என மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 38 மூட்டை குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது குறித்து விசாரிக்கையில், கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை பகுதியில் இருந்து, குட்கா பொருட்களை கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு கடத்திக் கொண்டு செல்வதாக வாகனத்தில் வந்த நபர்கள் கூறி உள்ளனர்.

மேலும், கேரள மாநிலம் பாலக்காடு ஜயராடி பகுதியைச் சேர்ந்த அக்பர் (44) மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி (32) ஆகியோர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஆசனூர் போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து. சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: "கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பள்ளி, கல்லூரி அருகில் 91 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details